தமிழ்நாடு

'ஜெயலலிதாவுக்கு டான்சி நிலம்; அண்ணாமலைக்கு ரபேல் வாட்ச்' - ஆர்.எஸ். பாரதி விளாசல்

'ஜெயலலிதாவுக்கு டான்சி நிலம்; அண்ணாமலைக்கு ரபேல் வாட்ச்' - ஆர்.எஸ். பாரதி விளாசல்

webteam

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா டான்சி நிலத்தை வாங்கி குற்றம் செய்தார்களே..  அந்த மாதிரி பாஜக அண்ணாமலை ரபேல் வாட்ச் விவகாரத்தில் சிக்கி உள்ளார் எனக் கூறியுள்ளார் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி.

கிருஷ்ணகிரி மாவட்ட திமுக சார்பில் மறைந்த திமுக முன்னாள் பொதுச் செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் கிருஷ்ணகிரியில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான மதியழகன் தலைமை வகித்தார். இதில் திமுக அமைப்புச் செயலாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆலந்தூர் ஆர் எஸ் பாரதி கலந்து கொண்டு நூற்றாண்டு விழா சிறப்புரையாற்றினார்.

இந்த கூட்டத்தில் பேசிய ஆர்.எஸ். பாரதி திமுகவின் வரலாறு, அதில் பேராசிரியர் அன்பழகன் ஆற்றிய செயல்கள் குறித்து வரலாற்று சிறப்பு அம்சங்களை எடுத்துரைத்து பேசினார். மேலும் பாஜக, அதிமுக-வை விமர்சித்தும் பேசினார். அவர் பேசுகையில், “திமுகவை விமர்சிக்கும் எடப்பாடி, ஓபிஎஸ் போன்றவர்களுக்கு நான் சொல்லப்போகும் வரலாறு தெரியாது. 'உலகம் சுற்றும் வாலிபர்' படத்திற்காக எம்ஜிஆர் உலகம் முழுவதும் சுற்றினார். அப்போது அன்னிய செலவாணி வழக்கில் சிக்கிக் கொண்டார். இதனால் நமக்கும் மத்திய அரசுக்கும் பிரச்சனைகள் வந்தது, கருத்து வேறுபாடு நிலவியது. அந்த சமயத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வந்த போது, திமுக ஆட்சியில் இருந்த நேரத்தில் தமிழகத்தில் கலைஞர் ஆட்சியை கலைத்து விட்டு நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலையும் நடத்தினர். இதில் 184 இடங்களில் தனி பெரும்பான்மை பெற்றார்.

இந்த தேர்தலில் திமுக-வுடன் கூட்டணியில் இருந்த காங்கிரஸ் 14 இடங்களில் வெற்றிப்பெற்றது. 184 இடங்களில் திமுக வெற்றி என அறிந்த காங்கிரஸ், திமுகவை உடைக்க முயற்சித்தனர். அதனால் திமுகவிலிருந்து எம்ஜிஆரை பிரிக்க சதி நடந்தது. 1972 ஆம் ஆண்டு சேலத்தில் முக முத்துவிற்கு ரசிகர் மன்றம் திறக்கப்பட்டதால் எம்ஜிஆர் மன்றம் கலைக்கப்பட்டு மு.க முத்து ரசிகர் மன்றம் துவங்கப்படுவதாக எம்.ஜி.ஆர் திமுகவில் இருந்து விலகிச் சென்றார். இந்த வரலாறு இன்றைய அதிமுகவிற்கு தெரியாது.

வாரிசு அரசியலை பற்றி இன்று பேசுகின்றனர். பேரறிஞர் அண்ணாவுக்கு பிறகு கலைஞர் இருந்தார். 50 ஆண்டு காலம் திமுக வழி நடத்தினார். வயது முதிர்வு காரணமாக அவரால் சில நிர்வாக பணிகளை செய்ய முடியாத சூழலில் பேராசிரியர் அவர்களால் ஸ்டாலினை சட்டதிட்டங்கள் மாற்றப்பட்டு செயல் தலைவராக பேராசிரியர் அறிவித்தார். கலைஞருக்கு பிறகு இன்று ஸ்டாலின் இந்த இயக்கத்தை வழி நடத்துகிறார். அதிமுகவில் எம்ஜிஆர்க்கு பிறகு அவரது துணைவியார் ஜானகி அம்மையார், அவருக்கு பிறகு ஜெயலலிதா முதலமைச்சராக ஆக இருந்தார். அரசியல் சாசனப்படி பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு இருந்தால் முதலமைச்சர் ஆகலாம். சசிகலாவுக்கு பெரும்பான்மை இருந்தும் ஆளுநரால் பதவிப்பிரமாணம் செய்து வைக்கவில்லை. பாஜகவின் சதியால் சசிகலாவால் முதலமைச்சராக இல்லை, எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் ஆனார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பெரிய குற்றம் ஒன்றும் செய்யவில்லை, முதலமைச்சராக இருந்த போது டான்சி நிலத்தை வாங்கிய குற்றம் செய்தார்களே.... அதே மாதிரிதான் இன்றைக்கு பாஜக மாநில செயலாளர் அண்ணாமலை ரபேல் வாட்ச் வாங்கி மாட்டி உள்ளார். என் ஜாதகம் மோசமான ஜாதகம். நான் புகார் அளித்தால் ஒன்று சிறைக்கு சென்று விடுவார், அல்லது அரசிலை விட்டு விலகி விடுவார், அல்லது பாதியில் மேலே சென்று விடுவார், அப்படி ஒரு வித்தியாசமான ராசி. இதில் அண்ணாமலை மாட்டி உள்ளார்'' என்று உரையாற்றினார்.