இளையராஜா விவகாரத்தில் தேவையில்லாமல் திமுகவை வீண்வம்புக்கு இழுக்க வேண்டாம் என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகனுக்கு திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ப்ளூ கிராஃப் டிஜிட்டல் ஃபவுண்டேஷன் நிறுவனம் 'மோடியும் அம்பேத்கரும்' என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் சீர்திருத்தவாதிகளின் கருத்துகளும், செயல்பாட்டாளர்களின் அமலாக்கமும் என்ற தலைப்பில், புத்தகத்தின் முன்னுரையில் இசையமைப்பாளர் இளையராஜா, “பிரதமர் மோடி தலைமையில் நாடு வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் கண்டு வருகிறது. இந்தியாவின் உள்கட்டமைப்புகள் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது, சமூக நீதி விஷயத்தில் பிரதமர் மோடி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மோடியின் முத்தலாக் தடை போன்ற பல்வேறு சமூகப் பாதுகாப்பு திட்டங்களைக் கண்டு, அம்பேத்கர் பெருமிதம் கொள்வார். அம்பேத்கரும் மோடியும் இந்தியா குறித்து பெரிய கனவு கண்டவர்கள்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இளையராஜாவின் இந்தக் கருத்துகள் கடந்த 2 நாட்களாக சர்ச்சையையும், விவாதத்தையும் தூண்டியிருக்கிறது. மோடியை அம்பேத்கருடன் ஒப்பிடுவது முற்றிலும் தவறானது, முரணானது என்றும் சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பிரதமர் குறித்த இசையமைப்பாளர் இளையராஜாவின் கருத்துக்கு திமுகவைச் சேர்ந்த யாரும் எவ்வித கருத்தும் கூறவில்லை என ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் குறித்து இளையராஜா கருத்து சொல்வது எல்.முருகன் வாதத்தின்படி எப்படி கருத்து சுதந்திரமாகுமோ, அதேபோல இளையராஜாவின் கருத்து குறித்து விமர்சனம் செய்திட மற்றவர்களுக்கும் சுதந்திரம் உண்டு என்பதை எல்.முருகன் புரிந்து கொள்ள வேண்டுமென ஆர்.எஸ்.பாரதி குறிப்பிட்டுள்ளார். ஏற்கெனவே முரசொலி கட்டடம் குறித்த பேச்சுக்கு எல்.முருகன் மீது நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதாக சுட்டிக் காட்டியுள்ள அவர், மேலும் ஒரு வழக்கை தொடர வழிவகுக்க வேண்டாம் என்று எல்.முருகனை எச்சரித்துள்ளார்.