தமிழ்நாடு

போலி ஆவணம் மூலம் 4 கோடி நிலம் அபகரிப்பு - சென்னையில் இருவர் கைது

போலி ஆவணம் மூலம் 4 கோடி நிலம் அபகரிப்பு - சென்னையில் இருவர் கைது

webteam

ரூ.4 கோடி மதிப்புள்ள நிலத்தை போலி ஆவணம் மூலம் அபகரித்த இருவர் சென்னையில் கைது செய்யப்பட்டனர். 

ஹைதராபாத் மாநிலம், நாச்சராம் ரோடு, ஸ்நேகாபுரியை சேர்ந்தவர் ஸ்ரீநிவாசமூர்த்தி (62). இவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், ‘‘எனது தந்தை நாகராஜுக்கு சொந்தமான, 3160 சதுரஅடி பரப்பளவு கொண்ட நிலம் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ளது. அதன் மதிப்பு  ரூ.4 கோடி ஆகும். கடந்த 1984ம் ஆண்டு எனது தந்தை அதனை வாங்கினார். இந்நிலையில் கடந்த 2009ம் ஆண்டு அவர் திடீரென காலமாகி விட்டார். 

அதன் பின்னர் எனது குடும்பத்தினர் அந்த நிலத்தை பராமரித்து வந்தனர். இந்நிலையில் அந்த நிலத்தை அபரிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் போலியான ஆவணத்தை மர்ம நபர்கள் தயார் செய்துள்ளனர். இறந்து போன எனது தந்தை நாகராஜன் எழுதிக் கொடுத்தது போல போலி ஆவணங்களை தயாரித்து, ஆள்மாறாட்டம் செய்து அந்த நிலத்தை மோசடி செய்துள்ளனர். இது தொடர்பாக பத்திரப்பதிவு அலுவலகத்தில் போய் விசாரித்த போது, ஹைதராபாத்தை சேர்ந்த குமார் என்பவர் பெயரில் கடந்த மார்ச் மாதம் 6ம் தேதியன்று ஆலந்துார் சார்பதிவாளர் அலுவலகத்தில் பொது அதிகார பத்திரம் பதிவு செய்துள்ளனர். 

அதனை வைத்துக் கொண்டு சுற்றுச்சுவர் கட்ட முயற்சி செய்து வருகின்றனர்.  எனவே அந்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ இவ்வாறு அந்தப் புகார் மனுவில் கூறியிருந்தார். இந்தப் புகார் தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு நிலமோசடி தடுப்புப் பிரிவு போலீசார் விசாரணை நடத்தியதில், சீனிவாசன் அளித்த புகார் உண்மை எனத் தெரியவந்தது. இதன் தொடர்ச்சியாக போலீசார் ஹைதராபாத்தைச் சேர்ந்த சுண்டூரி வெங்கடகோட்டி சாய்குமார் (47), சென்னை ஜாபர்கான் பேட்டையைச் சேர்ந்த ஹரி (48) ஆகிய இருவரையும் கைது செய்தனர். விசாரணைக்குப் பின்னர் இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.