தமிழ்நாடு

கோவை மாவட்டத்தில் எத்தனை பேருக்கு நகைக்கடன் தள்ளுபடி? வெளியானது அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் எத்தனை பேருக்கு நகைக்கடன் தள்ளுபடி? வெளியானது அறிவிப்பு

webteam

கோவை மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் 47,567 பயனாளிகளுக்கு ரூ.199.52 கோடி மதிப்பிலான நகைக் கடன் தொகை தள்ளுபடி செய்யப்படுவதாகவும், பயனாளிகள் வங்கியை அணுகுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட்டுறவு சங்கங்களில் 5 சவரனுக்கு கீழ் உட்பட்ட நகைக்கடன்களை சில தகுதிகளின் அடிப்படையில் தள்ளுபடி செய்வதாக அறிவித்து இருந்தார். இது தொடா்பாக, கோயமுத்தூா் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளா் எஸ்.பாா்த்திபன் செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழக முதலமைச்சர் உத்தரவின்படி 5 சவரனுக்கு உட்பட்டு நகைக்கடன் பெற்று அரசாணைக்கு உள்பட்டு அனைத்து தகுதிகளையும் 47,567 பயனாளிகள் நிறைவு செய்துள்ளனர். அந்த பயனாளிகளுக்கு ரூ.199.52 கோடி மதிப்பிலான கடன் தொகை தள்ளுபடி செய்யப்பட உள்ளது. அந்த பயனாளிகளுக்கு அவா்கள் நகைக்கடன் பெற்ற கூட்டுறவு வங்கிக் கிளைகளில் தள்ளுபடி சான்றிதழ் வழங்கப்படுகிறது.

கோயமுத்தூா் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் அதன் கிளைகள், நகரக் கூட்டுறவு வங்கிகள் மற்றும் அதன் கிளைகள், தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளா்ச்சி வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கங்கள், பொள்ளாச்சி நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை ஆகிய நிறுவனங்களில் தள்ளுபடி சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. மொத்த எடை 5 சவரனுக்கு உட்பட்டு, கடன் பெற்றுள்ள தகுதியுடைய பயனாளிகள் சம்பந்தப்பட்ட கூட்டுறவு சங்கத்தை அணுகி கடன் தள்ளுபடி சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம் என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.