ஓதுவார் பயிற்சி பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு ரூ.3 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைத்துள்ளார்.
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 44,291 கோயில்கள் உள்ளன. இதில், 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரதான கோயில்களிலும், சிவன் கோயில்களில் திருமுறைகளைக் குறைவின்றி ஓதிட ஏதுவாக, மதுரை மீனாட்சி அம்மன் கோயில், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் சார்பாக ஓதுவார் பயிற்சி பள்ளி நடைப்பெற்று வருகிறது.
இந்த பயிற்சி பள்ளியில் 3 ஆண்டு கால சான்றிதழ் படிப்பு அளிக்கப்படுகிறது. கடந்த 3 ஆண்டுகாலமாக ஓதுவார் பயிற்சி பள்ளியில் மாணவர் சேர்க்கை நடத்தப்படவில்லை. இந்த நிலையில், திமுக ஆட்சி பொறுப்பேற்ற நிலையில் பயிற்சி பள்ளியில் மீண்டும் மாணவர் சேர்க்கை நடத்த முடிவு செய்யப்பட்டு, பள்ளியில் சேர விரும்பும் மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு, மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த மாணவர்களுக்கு கடந்த காலங்களில் ரூ.1000 உதவித் தொகை வழங்கப்பட்டதை அடுத்து ஊக்கத்தொகை குறைவு என்பதால் ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்ததையேற்று, ஓதுவார் பயிற்சி காலத்தில் ரூ.3 ஆயிரம் வழங்கப்படும் என்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்தார்.
அதன்படி, பயிற்சி பள்ளியில் சேர தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு ரூ.3 ஆயிரம் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் இன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, ஆணையர் குமரகுருபரன் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
தொடர்புடைய செய்தி: கோவில் ஓதுவார் பணி: 13 ஆண்டுகளுக்குப் பிறகு பெண் ஒருவர் நியமனம்