தமிழ்நாடு

சென்னையில் பழிக்குப்பழியாக கொல்லப்பட்ட ரவுடி : 5 பேர் கைது

சென்னையில் பழிக்குப்பழியாக கொல்லப்பட்ட ரவுடி : 5 பேர் கைது

webteam

சென்னையில் 8 ஆண்டுகளுக்கு முன் நடந்த கொலைக்கு பழிக்குப்பழியாக ரவுடி கொல்லப்பட்ட வழக்கில், 5 ரவுடிகளை காவல்துறை கைது செய்துள்ளது.

சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் கிச்சா என்ற கிருஷ்ணமூர்த்தி. இவர் மீது கொலை முயற்சி, ஆள்கடத்தல், கொலை மிரட்டல் என சுமார் 15 வழக்குகள் நிலுவையில் உள்ளன. பிரபல ரவுடியாக திகழ்ந்த இவர், திருமணத்திற்குப் பின்னர் மினி சரக்கு வேன் ஓட்டி வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இவர் அரும்பாக்கம் பெருமாள் கோயில் தெருவில் மினி வேனில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது வாகனத்தை வழிமறித்த 5 பேர் கொண்ட கும்பல், நடுரோட்டில் ஓட ஓட வெட்டிக் கொலை செய்தது. 

இதுகுறித்து 2 தனிப்படை அமைத்து அரும்பாக்கம் காவல் நிலையத்தினர் விசாரணை நடத்தி வந்தனர். அத்துடன் முன்விரோதம் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரித்தனர். இந்நிலையில் அரும்பாக்கம் மற்றும் கோயம்பேட்டைச் சேர்ந்த சங்கர், கார்த்திக், கவிராஜ், அஜீத்குமார், பாபு ஆகிய 5 ரவுடிகளை காவல்துறையினர் கைது செய்தனர். விசாரணையில், தனது‌ சித்தப்பா நாகராஜ் 2011ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டதாகவும், அதற்கு பழிக்குப் பழியாக கிருஷ்ணமூர்த்தியை கொலை செய்ததா‌கவும் காவல்துறையினரிடம் சங்கர் தெரிவித்துள்ளார்.