அரிவாளால் பிறந்த நாள் கொண்டாட்டம்.. தலைமறைவு.. போலீசாரிடம் பகீரங்க மன்னிப்பு.. கைது.. மீண்டும் தலைமறைவு என அடிக்கடி வெட்ட வெளிச்சத்திற்கு வரும் ரவுடி பினு மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நேரத்தில் யார் இந்த பினு என்பதை தெரிந்து கொள்வோம்.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் காஞ்சிபுரம் மாவட்டம் மலையம்பாக்கத்தில் ரவுடி பினு கூட்டாளிகளுடன் பிறந்தநாள் கொண்டாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பான புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. காவல்துறையினர் அவரை தீவிரமாக தேடி வந்த நிலையில் பினுவே போலீசாரிடம் சரண் அடைந்தார். சரணடைந்த ரவுடி பினு, காவல் துறையிடம் அளித்த வாக்குமூலத்தில், ‘நீங்கள் நினைப்பது போல நான் பெரிய ரவுடியல்ல. மன்னித்து விட்டு விட்டால் திருந்தி வாழ்கிறேன்” என பகீரங்கமாக மன்னிப்பு கேட்டார்.
சுமார் 3 மாதங்களாக வேலூர் சிறையில் இருந்த பினுவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. ஜாமீனில் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட அவர் காவல்நிலையத்தில் ஆஜராகாமல் போலீசாருக்கு டிமிக்கு கொடுத்து தலைமறைவானார். திருந்தி வாழ்கிறேன் என வாக்குமூலம் கொடுத்தவரே வெறும் 3 மாதத்தில் தலைமறைவானார்.
ஆனால் பினுவை தேடுவதில் போலீசார் தவறவில்லை. ஒருவழியாக கும்மிடிப்பூண்டி அருகே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பினுவை போலீசார் கைது செய்தனர். ஆனால் அதன்பின்னும் தலைமறைவாகி தொடர்ச்சியாக தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்த வந்த பினுவை போலீசார் இன்று அதிரடியாக கைது செய்துள்ளனர்.
கேரளாவிலிருந்து பிழைப்பிற்காக சென்னை வந்த பினு, 1990-களில் கராத்தே பயிற்றுநராக இருந்ததாக கூறப்படுகிறது. அதன்பின் அடிதடி வழக்கில் கைதான நிலையில் அரும்பாக்கத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவருடன் கை சேர்ந்து ரவுடியாக மாறியதாக சொல்லப்படுகிறது. அடிக்கடி சிறை சென்ற வந்த பினு மீது ஏகப்பட்ட குற்ற வழக்குகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது.