கிருஷ்ணகிரி ஊத்தங்கரை அருகே இருளர் இன மக்கள் சுடுகாட்டுக்கு வழி இல்லாமல் இரண்டு நாட்களாக சடலத்தை வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கல்லாவி பனமரத்துப்பட்டியில் வசிக்கும் இருளர் இன மக்கள் நீண்ட காலமாக பயன்படுத்தி வந்த சுடுகாட்டுக்கு வழி இல்லாமல், இரண்டு நாட்களாக சடலத்தை வைத்து நூதன முறையில் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஊத்தங்கரை அடுத்த பனமரத்துப்பட்டி இருளர் இன மக்கள், 250 க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தமிழக துணி நூல் மற்றும் கைத்தறி துறை அமைச்சர் காந்தி நேரடியாக இப்பகுதிக்கு வந்து பார்வையிட்டு இங்கு உள்ள மக்களின் குறைகளை கேட்டறிந்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்நிலையில் திடீரென்று கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, இப்பகுதியை சேர்ந்த பக்கத்து நிலத்தை சின்னத்தம்பி என்பவர் ஊரை ஒட்டி உள்ள நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து 50 ஆண்டு காலமாக சுடுகாட்டுக்கு சென்று வந்த வழியை அடைத்து ஜேசிபி உதவியுடன் ஆக்கிரமிப்பு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் இங்குள்ள மக்கள் சடலத்தை எடுத்துச் செல்ல வழி இல்லாமல் இரண்டு நாட்களாக சடலத்தை ஊரில் வைத்து கொண்டு நூதன முறையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சம்பவ இடத்திற்கு வந்த ஊத்தங்கரை தாசில்தார் கோவிந்தராஜ், கல்லாவி போலீசார் மற்றும் அப்பகுதியில் உள்ள திமுக கவுன்சிலர் குணசேகரன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் தீர்வு எட்டப்படாத நிலையில் சடலத்தை எடுக்காமல் இருளர் இன மக்கள் கண்ணீர் மல்க போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அதன்பின் அதிகாரிகளின் பேச்சுவார்த்தைக்கு பிறகு சமாதானத்திற்கு வந்த இருளர் இன மக்கள், சடலத்தை மயானத்திற்கு கொண்டு சென்று அடக்கம் செய்தனர்.