தமிழ்நாடு

வீட்டு வேலை செய்ய சொன்ன அதிகாரி ? - விடுப்புக்கு ஊதியம் கேட்கும் பணியாளர்

வீட்டு வேலை செய்ய சொன்ன அதிகாரி ? - விடுப்புக்கு ஊதியம் கேட்கும் பணியாளர்

webteam

தருமபுரி நெடுஞ்சாலை துறை அதிகாரிகளின் வீட்டு வேலை செய்ய மறுத்ததால் தனக்கு சம்பளம் வழங்கவில்லை என சாலை பணியாளர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

தருமபுரி மாவட்டம் இண்டூர் பகுதியை சேர்ந்தவர் வடிவேல். இவர் கடந்த தருமபுரி கோட்டத்தில் 1997ஆம் ஆண்டு நெடுஞ்சாலை துறை பணியாளராக சேர்ந்துள்ளார். இத்தனை வருடங்களாக பணியாற்றி வந்த இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பிலிருந்து அதியமான்கோட்டை-ஓசூர் நெடுஞ்சாலைதுறை ஆய்வாளருக்கு கீழ் சாலைப்பணியாளராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் வடிவேலை, சாலை ஆய்வாளர் தொடர்ந்து தங்களது வீட்டு வேலைகளை செய்ய வைத்ததாக கூறப்படுகிறது. 

இதற்கிடையே உடல்நிலை சரியில்லாத காரணத்தால், வீட்டு வேலைகளை செய்ய வடிவேல் மறுத்ததாக தெரிகிறது. இதனால் தனக்கு பணிகள் வழங்க மறுக்கப்பட்டதாக வடிவேல் குற்றம்சாட்டியுள்ளார். அத்துடன் மாத சம்பளமும் வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அதிகாரிகளிடம் வடிவேல் புகார் தெரிவித்துள்ளார். இவ்வாறு புகார் தெரிவித்ததின் எதிரொலியாக, வடிவேலு தொப்பூர்-பொம்மிடி சாலை ஆய்வாளரிடம் பணி செய்ய மாற்றப்பட்டார். அதன்பின்னர், பென்னாகரம் பகுதிக்கு மாற்றப்பட்டார். இந்த மாற்றங்களால் அவருக்கு 5 மாதங்களுக்கு மேல் சம்பளம் வழங்கப்படவில்லை என வடிவேலும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அத்துடன் தருமபுரி நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
 இதுகுறித்து தருமபுரி கோட்ட உதவி பொறியாளர் குலோத்துங்கனிடம் கேட்ட போது, ‘சாலை பணியாளர் வடிவேல் முறையாக பணிக்கு வருவதில்லை. சாலை ஆய்வாளருக்கு தகவல் தெரிவிக்காமலே விடுப்பு எடுத்து கொள்கிறார். இவர் வரையறுக்குபட்ட விடுமுறையை தாண்டி விடுப்பு எடுத்து கொண்டு பணிக்கு வருவதில்லை. அவர் 5 மாதம் விடுப்பு எடுத்தால், அவருக்கு சம்பளம் வழங்கப்படவிலை’ எனக் குற்றஞ்சாட்டினார்.