தமிழ்நாடு

வசிஷ்ட நதியில் மணல் கொள்ளை : வெளிச்சத்திற்கு கொண்டுவந்த புதிய தலைமுறை

வசிஷ்ட நதியில் மணல் கொள்ளை : வெளிச்சத்திற்கு கொண்டுவந்த புதிய தலைமுறை

webteam

சேலம் வசிஷ்ட நதியில் மணல் கொள்ளை நடந்து வருவது புதிய தலைமுறையின் கள ஆய்வில் தெரியவந்துள்ளது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வற்றாத ஜீவ நதி என்று பொதுமக்களால் அழைக்கப்படும் வசிஷ்ட நதி,‌ ஆத்தூர் சுற்றுவட்டாரப் பகுதி, விழுப்புரம் மாவட்டத்தின் ஒரு பகுதி, பெரம்பலூர் மாவட்டத்தின் ஒரு பகுதி என பல்வேறு பகுதிகளுக்கு நீர் பாசன ஆதாரமாக திகழ்ந்தது. தற்போது வசிஷ்ட நதி வறண்டு பாலைவனமாக காட்சியளிப்பதால், மணல் கொள்ளையர்கள் பகிரங்கமாக மணல் திருட்டில் ஈடுபடுவது புதிய தலைமுறையின் கள ஆய்வில் தெரியவந்திருக்கிறது. 

வசிஷ்ட நதி செல்லும் ஆத்தூர், அம்மம்பாளையம், பெத்தநாயக்கன் பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தங்கு தடையின்றி மணல் கொள்ளை நடைபெற்று வருவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இதனால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வருந்துகின்றனர். இ‌தனிடையே, வசிஷ்ட நதிக்கு மீண்டும் நீராதார வசதியை ஏற்படுத்த தமிழ்நாடு அரசு சார்பில் கைக்கான் வலவு திட்டத்தை செயல்படுத்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

மேலும், காவிரி உபரி நீரை வசிஷ்ட நதியில் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது. என்னதான் நீர் ஆதாரத்திற்கு வழிவகை செய்தாலும் வசிஷ்ட நதியில் நடந்து வரும் மணல் கொள்ளையை தடுத்தால்தான் பயன்பெற முடியும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.