டிடிவி.தினகரன் தவறுகளை ஒப்புக்கொண்டு மன்னிப்புக் கடிதம் கொடுத்தால், அதிமுகவில் இணைப்பது குறித்து தலைமை பரிசீலிக்கும் என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்தார்.
சசிகலா தனது காரில் அதிமுக கொடியை பயன்படுத்திய விவகாரம் குறித்து பேசிய அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி “அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மட்டும்தான், மற்றவர்கள் தங்கள் சுயநலத்துக்காக கூறுகின்றனர். அதிமுகவில் இல்லாத சசிகலா, அதிமுக கொடியை பயன்படுத்தியது கண்டனத்திற்குரியது. பல்வேறு கோணங்களில் அதிமுகவை கைப்பற்ற தினகரன் முயற்சி செய்து பார்த்தார். தன்னை காப்பாற்றிக்கொள்வதற்காக தன்பக்கம் இருப்பவர்களை ஏமாற்றி வருகிறார் தினகரன்” எனக் கூறினார்.
அதிமுக-அமமுக இணைக்கப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த கே.பி.முனுசாமி “ஒரு கட்சியில் தவறு செய்துவிட்டு கட்சியைவிட்டு வெளியே சென்றவர்கள், தனது தவறுகளை உணர்ந்து மன்னிப்புக் கடிதம் தந்தால், தலைமை அவர்கள்மீது நம்பிக்கை வைக்கிற பட்சத்தில் மீண்டும் கட்சியில் சேர்த்துக்கொள்வார்கள். இது இந்த இயக்கத்தின் மரபு. அந்த மரபின் வாயிலாக வேண்டுமென்றால் டிடிவி தினகரன், தனது தவறுகளை ஒப்புக்கொண்டு, மீண்டும் கட்சியில் ஒரு தொண்டனாக சேர்த்துக்கொள்ளுமாறு வருத்தம் தெரிவித்து கடிதம் கொடுத்தால் கட்சி அதுபற்றி பரிசீலனை செய்யும்” எனத் தெரிவித்தார்.