தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக 31வது கட்ட விசாரணையை ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தொடங்கியுள்ளார். வட்டாட்சியர்கள், மருத்துவர்கள் என 30 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் கடந்த 2018ஆம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது, காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் தடியடியில் 13 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 30 கட்ட விசாரணையில் 962 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் 31ஆவது கட்ட விசாரணை, தூத்துக்குடி விருந்தினர் மாளிகையில் உள்ள முகாம் அலுவலகத்தில் தொடங்கியது. துப்பாக்கிச் சூடு நிகழ்வின்போது பணியில் இருந்த மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள், உயிரிழந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள், தடயவியல் நிபுணர்கள், துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவு பிறப்பித்த வட்டாட்சியர்கள் உள்பட மொத்தம் 30 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. வருகிற 26-ந் தேதி வரை விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.