இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கான கட்டமைப்புகள் தயார் நிலையில் உள்ளனவா என்பதை மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.
தமிழ்நாடு முழுவதும் இன்று 11,000 அரசு மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை கட்டமைப்பு தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளன. பிற பகுதிகளில் அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையிலான கண்காணிப்புக் குழுக்கள் ஆய்வு நடத்தும் நிலையில், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்ரமணியன் ஆய்வு மேற்கொண்டார்
முன்னதாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட பணியாளர் ஒருவரை ஆம்புலன்ஸில் இருந்து அழைத்து வந்து சிகிச்சை அளிக்கப்படும் முறைகள் டெமோவாக அமைச்சர் முன்பு செய்து காட்டப்பட்டது.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா சுப்பிரமணியன்...
கொரோனா முன்னேற்பாடுகள் குறித்த மாதிரி பயிற்சி அளிக்க ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் மாதிரி பயிற்சி இன்றும் நாளையும் நடைபெறும். கடந்த 24 மணி நேரத்தில் இந்திய அளவில் 5360 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கேரளா, மகாராஷ்டிரா மற்றும் டெல்லியில் அதிக அளவு பரவி வருகிறது. பாதிக்கப்பட்டவர்கள் வீட்டில் தனிமைப் படுத்தப்பட்டு வருகிறார்கள். இந்த வைரஸின் பாதிப்பு மிகப்பெரிய அளவில் வீரியமாக இல்லை. ஆக்சிஜன் தேவை என்ற நிலை இல்லை. மருத்துவமனையில் உள்ள படுக்கைகளின் எண்ணிக்கை, வென்டிலேட்டர் பயிற்சிகள், மருத்துவப் பணியாளர்களின் செயல்பாடு, கோவிட் பரிசோதனை வசதிகள், மாத்திரை மருந்து கையிருப்பு, முகக் கவசம் கையிருப்பு குறித்து ஆய்வு செய்யப்படும்.
அவசர ஊர்திகள் செயல்பாடுகள் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. தமிழ்நாட்டில் 64,281 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. 24,500 ஆக்சிஜன் வென்டிலேட்டர் தயார் நிலையில் உள்ளது. 130 ஆக்சிஜன் கிடங்குகள் உள்ளன. 230 மெட்ரிக் டன் என இருந்த ஆக்சிஜன் சேமிப்புத்திறன், தற்போது 2076 மெட்ரிக் டன் என அதிகப்படுத்தியுள்ளோம்.