தமிழ்நாடு

மாமல்லபுர கடலில் மூழ்கியுள்ள கட்டுமானங்கள் பல்லவர் காலத்திற்கும் முந்தையதா?

மாமல்லபுர கடலில் மூழ்கியுள்ள கட்டுமானங்கள் பல்லவர் காலத்திற்கும் முந்தையதா?

நிவேதா ஜெகராஜா

மாமல்லபுரத்தில் கடலில் மூழ்கியுள்ள கட்டுமானங்களில் பல்லவர் காலத்திற்கும் முந்தையவையும் உள்ளது அறிவியல் ஆய்வுகளில் தெரியவந்துள்ளது

சென்னை அருகே உள்ள மாமல்லபுரம் கடற்கரை கோயில் உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இக்கோயிலுக்கு அருகே உள்ள கடலுக்குள் கல் தூண்கள், சுவர்கள் உள்ளிட்டவை இருப்பது தெரியவந்தது. அவற்றை தேசிய கடல் ஆராய்ச்சி மையம் கடந்த 2017ஆம் ஆண்டு ஆய்வு செய்தது. சுவர்கள், தூண்கள் மீதிருந்த படிவுகளில் இருந்து மாதிரிகள் எடுத்து அவை ரேடியோ கார்பன் டேட்டிங் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

கடற்கரை கோயிலில் இருந்து கடலில் சுமார் 500 மீட்டர் தொலைவில் 3 இடங்களில் 4 முதல் 6 மீட்டர் ஆழத்தில் இருந்து இந்த மாதிரிகள் எடுக்கப்பட்டிருந்தன. இதில் ஒரு மாதிரி கி.பி 35ஆம் ஆண்டு அதாவது முதல் நூற்றாண்டில் மூழ்கியதாக இருக்கலாம் என கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் இக்கட்டுமானங்கள் பல்லவர் காலத்திற்கும் முந்தையவை என தெரியவருகிறது. மற்றொரு மாதிரி 14ஆம் நூற்றாண்டையும் 3ஆவது மாதிரி 19ஆம் நூற்றாண்டையும் சேர்ந்தவையாக இருக்கலாம் என ஆய்வறிக்கையில் கூறப்படுகிறது.

கடலுக்குள் உள்ள 14ஆம் நூற்றாண்டு கட்டுமான கற்கள், கடற்கரை கோயிலில் உள்ள கற்களை ஒத்திருப்பதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆனால் முதலாம் நூற்றாண்டை சார்ந்தவை என கருதப்படும் கற்கள் மற்றவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. கடல் அரிப்பு உள்ளிட்ட இயற்கை சீற்றங்களால் இந்த கட்டுமானங்கள் கடலுக்கு அடியில் சென்றிருக்கலாம் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த ஆய்வறிக்கை தமிழக வரலாறு குறித்த புதிய தகவல்கள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது