தமிழ்நாடு

அகற்றப்படும் வீடுகளால் மக்கள் சந்திக்கும் பிரச்னைகள்; அரசின் மாற்றுத்திட்டம் என்ன? #சென்னை

அகற்றப்படும் வீடுகளால் மக்கள் சந்திக்கும் பிரச்னைகள்; அரசின் மாற்றுத்திட்டம் என்ன? #சென்னை

sharpana

நீதிமன்ற உத்தரவின் பேரில், சென்னையில் பல்வேறு ஆக்கிரமிப்பு நிலங்களில் கட்டப்பட்டிருக்கும் வீடுகளை அகற்றும் நடவடிக்கைகளில் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது. இது குறித்து புதியதலைமுறையின் நியூஸ் 360 நிகழ்ச்சியில் முன்வைக்கப்பட்ட கருத்துக்களை இப்பகுதியில் விரிவாகப் பார்க்கலாம்.

சென்னையில் நீர்நிலைகள், புறம்போக்கு நிலங்கள், கோவில் நிலங்கள் மற்றும் சாலையோரத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை பொதுப்பணித்துறை அகற்றி வருகிறது. அந்த வகையில் அமைந்தகரை, சிட்லப்பாக்கம், கொளத்தூர் உள்ளிட்ட இடங்களில் ஆக்கிரமித்து கட்டப்பட்டதாக ஏராளமான வீடுகள் இடிக்கப்பட்டுள்ளன. தொடர்ச்சியாக பெத்தேல் நகரிலும் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால், அப்பகுதி மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கும் நிலுவையில் இருக்கிறது. ஆக்கிரமிப்பு இடங்களை காலி செய்ய ஒப்புக்கொண்டால் மாற்று இடம் வழங்குவது குறித்து பரிசீலனை செய்யப்படும் என வழக்கு விசாரணையின் போது தமிழக அரசு தெரிவித்தது. ஆனால், வீட்டு வரி உள்ளிட்ட அனைத்து வரிகளையும் முறையாக செலுத்தி வரும் நிலையில், திடீரென ஆக்கிரமிப்பு எனக் கூறி காலி செய்ய சொல்வது எந்த விதத்தில் நியாயம் என்றும் பாதிக்கப்பட்டவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். மேலும், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி வீடுகளை இடிப்பது, உடமைகளை எடுப்பதற்கு கூட அவகாசம் கொடுப்பதில்லை என்பது பாதிக்கப்பட்ட மக்கள் வைக்கும் குற்றச்சாட்டு.

ஆக்கிரமிப்பு பகுதிகளில் இருந்து அகற்றப்பட்ட மக்களுக்கு போதிய வசதிகளை செய்து தர வேண்டும் என்பது 1971 குடிசை மாற்று வாரிய சட்டம் பரிந்துரை செய்கிறது. அதாவது, வீடு அகற்றப்பட்ட பகுதியில் இருந்து 5 முதல் 8 கிலோ மீட்டருக்குள் வீடு கட்டித் தர வேண்டும் அல்லது வீடு அகற்றப்பட்ட நிலத்திற்கான பணத்தை கொடுக்க வேண்டும் என்பதையும் இச்சட்டம் பரிந்துரை செய்கிறது. ஆனால், 30 கி.மீ தொலைவிலேயே வீடுகள் ஒதுக்கப்படுகின்றன. மறைந்த ஜெயலலிதா மறுகுடியமர்வு நிதி என குறிப்பிட்ட தொகை பயனாளர்களுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால், இத்திட்டமும் சரியாக செயல்படுத்தப்படவில்லை என பயனாளர்கள் கூறுகின்றனர். பல ஆண்டுகளாக ஒரு பகுதியில் வாழ்ந்து வரும் மக்களை, ஆக்கிரமிப்பு என்ற பெயரில் வேறு பகுதிக்கு இடமாற்றும் போது அவர்களுக்கான வசதிகள் முழுமையாக கிடைக்க வேண்டும். ஆனால், அரசின் திட்டங்கள் எதுவும் தங்களுக்கு கிடைக்கவில்லை என்பது பயனாளர்களின் குற்றச்சாட்டாகும்.