அதிவேகமாக பைக்குகளை ஓட்டி, சிறுவர்களுக்கு மோசமான உதாரணத்தை ஏற்படுத்திவரும் பிரபல யூட்யூபர் டிடிஎஃப் வாசன், சாலை விதிகளை மீறிய புகாரின்பேரில் போலீசாரால் பலமுறை நடவடிக்கைக்கு ஆளாகியுள்ளார். இருந்தபோதும் அவர் தொடர்ந்து சாலை விதிகளை மீறிவந்த நிலையில், தற்போது விபத்துக்குள்ளாகி படுகாயமடைந்துள்ளார். அவர்மீது 2 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதியப்பட்டுள்ளது.
சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் தனது நண்பருடன் சென்ற போது போட்டிபோட்டிக்கொண்டு பைக்கை வேகமாக ஓட்டிய இருவரும் சாகசத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காஞ்சிபுரத்தை அடுத்த தாமல் பகுதியில் பைக் சென்று கொண்டிருந்த போது வீலிங் சாகசத்தில் ஈடுபட்ட TTF வாசன் பைக்கின் பின்புறமானது சாலையில் தேய்ந்து நிலைதடுமாறியுள்ளது.
இதில் பைக்கானது இரண்டு-மூன்று முறை தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் TTF வாசனுக்கு படுகாயம் ஏற்பட்டு, அவர் காரப்பேட்டை அருகிலுள்ள மீனாட்சி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் TTF வாசன் மீது பாலுசெட்டி சத்திர காவல்துறை 279 IPC (மனித உயிருக்கு ஆபத்து உண்டாகும் வகையில் அல்லது காயம் அல்லது தீங்கு ஏற்படும் விதத்தில், ஒரு வாகனத்தை அஜாக்கிரதையாக ஓட்டுவது) மற்றும் 338 IPC (பிறருடைய பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் முறையில் அசட்டுத் துணிச்சலுடன் வாகனத்தை இயக்குவது) உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது.
ஏற்கனவே இரண்டு பிரிவுகளின் கீழ் TTF வாசன் மீது வழக்கு பதியப்பட்டிருக்கும் நிலையில், தொடர்ந்து பைக் சாகசத்தில் ஈடுபட்டுவரும் அவருடைய டிரைவிங் லைசன்ஸை ரத்து செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்திய மோட்டார் வாகன சட்டம் 19-ன் படி பொது மக்களுக்கு விபரீதம் ஏற்படுத்தும் வகையில் வாகனத்தை ஓட்டினார் என்ற குற்றத்தின் அடிப்படையில் டிரைவிங் லைசன்ஸை ரத்து செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது.