EPS, Annamalai PT Web
தமிழ்நாடு

அண்ணாமலை நடைபயணம்: புறக்கணித்த இபிஎஸ்... இதுதான் காரணமா?

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மேற்கொண்டிருக்கும் நடைபயண தொடக்க விழாவில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்ளாததன் காரணம் குறித்து தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

Prakash J

தமிழக பாஜக சார்பில், 'என் மண்... என் மக்கள்' என்ற பெயரில் மாநிலத் தலைவர் அண்ணாமலை அனைத்து தொகுதிகளுக்கும் நடைபயணம் மேற்கொள்கிறார். இதன் தொடக்க விழா நேற்று (ஜூலை 28) ராமேஸ்வரத்தில் நடைபெற்றது. இதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நேற்று பிற்பகல் தனி விமானம் மூலம் மதுரை வந்தார்.

பாஜக நடைபயண தொடக்க விழா

இந்த நடைபயணத்தைத் தொடங்கிவைத்துப் பேசிய அவர், “இந்த நடைபயணம் தமிழின் பெருமையை காஷ்மீர் முதல் குமரிவரை கொண்டுசெல்லும். இந்த நடைபயணம் தமிழ்மொழியை உலகம் முழுவதும் கொண்டுசெல்லும் பயணம். தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கை சீர்படுத்துவதற்கான நடைபயணம்தான் இது. தமிழ்நாட்டின் அனைத்து தொகுதிகளுக்கும் பிரதமர் மோடியின் செய்தியை கொண்டு செல்லவிருக்கிறார் அண்ணாமலை” என்றார்.

முன்னதாக, இந்த விழாவில் பங்கேற்க அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், அண்ணாமலையின் இந்த அழைப்பை எடப்பாடி பழனிசாமி புறக்கணித்து இருந்தார். அதேநேரத்தில், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், மணிகண்டன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

பாஜக நடைபயண தொடக்க விழா

அதேபோல் பிரேமலதா விஜயகாந்த்தும் இந்த விழாவைப் புறக்கணித்திருந்தார். நெய்வேலி என்எல்சி நிறுவனத்திற்கு எதிராக நேற்று முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டார். இதனால் அவராலும் இந்த விழாவில் பங்கேற்க முடியவில்லை. எனினும், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான் பாண்டியன், ஐஜேகே பொதுச் செயலாளர் ரவி பச்சமுத்து, புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம், இந்திய கல்வி முன்னேற்றக் கழக தலைவர் தேவநாதன், அனைத்து இந்திய பார்வர்டு பிளாக் கட்சி தலைவர் திருமாறன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கிப் பேசினர்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு இந்த விழாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டும் அவர் கலந்துகொள்ளாததற்கு முக்கியக் காரணமே அவரின் எதிர்தரப்பான முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்டதுதான் என சொல்லப்படுகிறது. இதுதான் அதிமுகவில் சற்று சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் டெல்லியில் நடந்துமுடிந்த பாஜக தலைமையிலான தேசிய ஜனநாய கூட்டணியின் கூட்டத்தில் பிரதமர் மோடிக்கு அருகில் எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கை ஒதுக்கப்பட்டு, அவருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

ஓபிஎஸ்., இபிஎஸ்., அண்ணாமலை

அப்படியிருக்கையில், ஓ.பன்னீர்செல்வத்துக்கு பாஜக தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டதுதான் எடப்பாடி பழனிசாமிக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதாவது, ஓபிஎஸ் தரப்புக்கு விடுக்கப்பட்ட அழைப்பினால்தான் எடப்பாடி பழனிசாமி முடிவில் மாற்றம் ஏற்பட்டு அவர் கலந்துகொள்ளவில்லை எனச் சொல்லப்படுகிறது.

முன்னதாக, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து அண்ணாமலை கூறிய கருத்து, அதிமுக தொண்டர்கள், தலைவர்கள் மத்தியில் கொந்தளிப்பை உண்டாக்கியிருந்தது. அதேபோல எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை ஆகியோர் இடையே நீண்டநாள்களாக விரிசல் ஏற்பட்ட நிலையில், சமீபத்தில்தான் அதன் சூடு தணிந்தது எனலாம். ஆனாலும் தற்போது அண்ணாமலை மேற்கொள்ளும் நடைபயண தொடக்கவிழாவில் எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்ளவில்லை.

இந்த நிலையில் அண்ணாமலையின் நடைபயணம் குறித்து இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் விமர்சித்துள்ளார்.

இரா,முத்தரசன்

இதுகுறித்து அவர், ”ராமேசுவரம் என்பது இறந்தவர்களுக்கு திதி கொடுக்கும் இடம். அண்ணாமலை யாத்திரையை ராமேசுவரத்தில் தொடங்கியது மூலம் பா.ஜ.க.விற்கான முடிவுரை எழுதப்பட்டு விடும் என்பதை காட்டுகிறது. விளம்பரத்திற்காக அண்ணாமலை யாத்திரை செல்கிறார்” எனத் தெரிவித்துள்ளார்.

Minister Sekarbabu

முன்னதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, ”ஒருவேளை உடலை சீராக வைத்துக் கொள்வதற்காக, மருத்துவரின் ஆலோசனைப்படி இந்த நடைபயணத்தை மேற்கொள்கிறாரோ எனத் தெரியவில்லை. ஆனால், நடைபயணம் மட்டுமல்ல, எத்தனை குட்டிக்கரணம் அடித்தாலும், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தைப் பொறுத்தவரையில், மு.க.ஸ்டாலின் தலைமையிலான கூட்டணி புதுச்சேரி உள்பட 40 இடங்களையும் மீட்டெடுக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை” எனத் தெரிவித்திருந்தார்.