தமிழகத்தில் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் சில மாவட்டங்களில் கடந்த 3 ஆண்டுகளில் மிகவும் குறைந்திருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் தொடர்பாக சமகல்வி இயக்கம் என்ற தனியார் அமைப்பு புள்ளி விவரங்களை சேகரித்து இந்த தகவலை வெளியிட்டுள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், 10 மாவட்டங்களில் உள்ள சுகாதாரத் துறை மற்றும் அங்கன்வாடிகளில் புள்ளி விவரங்களை தனியார் அமைப்பு பெற்றுள்ளது. அதன்படி ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் எவ்வளவு இருக்கிறது என்பதைக் கணக்கிட்டு வெளியிட்டிருக்கிறது.
அதன்படி, திருவண்ணாமலை மற்றும் தருமபுரி மாவட்டங்களில் கடந்த மூன்று ஆண்டுகளாக பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் வெகுவாகக் குறைந்துள்ளது தெரியவந்திருக்கிறது. கடந்த 2015 - 16ஆம் ஆண்டில் ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு, பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் 926ஆக இருந்திருக்கிறது. அதுவே, அடுத்த ஆண்டில் 888ஆக குறைந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் ராமநாதபுரம் மாவட்டத்தில் 732ஆகவும், தருமபுரியில் 884ஆகவும், திருவள்ளூரில் 904ஆகவும் குறைந்திருக்கிறது.
பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்திருப்பது தொடர்பாக அந்த அமைப்பு பொதுமக்களிடம் கருத்து கேட்டதாகவும், அப்போது, பெண் குழந்தைகளைக் கருவிலேயே கண்டறிந்து கலைப்பதுதான் காரணம் என 55 சதவிகிதம் பேர் தெரிவித்ததாகக் கூறியுள்ளது. மேலும், வரதட்சணை, பெண் பாதுகாப்பு மற்றும் திருமணச் செலவு ஆகியவற்றை கணக்கில் கொண்டு ஆண் குழந்தைகளை அதிகம் விரும்புவதாக 72 சதவிகிதத்தினர் கூறியதாக அதிர்ச்சி தகவலை அந்த அமைப்பு கூறியுள்ளது.