Goat Market pt desk
தமிழ்நாடு

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை: எந்த ஊர் சந்தை தெரியுமா?

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு அய்யலூர் ஆட்டுச் சந்தையில் 1 கோடி ரூபாய்க்கு மேல் ஆடுகள் விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

Kaleel Rahman

திண்டுக்கல் மாவட்டம் அய்யலூரில் வியாழக்கிழமை தோறும் ஆடு மற்றும் கோழி சந்தை நடைபெற்று வருகிறது. பிரசித்தி பெற்ற இந்த சந்தைக்கு திண்டுக்கல் மட்டுமின்றி மதுரை, திருச்சி, கரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட வெளி மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகளும் வந்து ஆடு, கோழிகளை மொத்தமாக வாங்கிச் செல்கின்றனர்.

இந்நிலையில் நாளை மறுநாள் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதை அடுத்து இன்று அய்யலூரில் நடந்த சந்தை களைகட்டியது. அதிகாலை முதலே ஏராளமான வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் சந்தையில் குவிந்தனர். ஆடுகளையும், சேவல்களையும் வியாபாரிகள் வாங்கி தங்களது வாகனங்களில் ஏற்றிச் சென்றனர். வெள்ளாடுகளைக் காட்டிலும், செம்மறி ஆடுகளே அதிக அளவில் விற்பனையானது.

இதில், 10 கிலோ எடையுள்ள வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகள் ரூபாய் 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையானது. அதேபோல் ஒரு கிலோ நாட்டுக்கோழி ரூ.400 வரையிலும், சண்டைக்கு பயன்படும் கட்டு சேவல்கள் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரையிலும் விற்பனையானது. இது குறித்து வியாபாரிகள் கூறும்போது... அய்யலூர் ஆட்டுச் சந்தையில் ஆடு, கோழி விற்பனை அமோகமாக நடந்தது. சுமார் ரூ.1 கோடிக்கு மேல் விற்பனை நடந்துள்ளதாக தெரிவித்தனர்.

ஆடு மற்றும் கோழிகளுக்கு வழக்கத்தை விட நல்ல விலை கிடைத்ததால் விவசாயிகளும் வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.