தமிழ்நாடு

ரம்ஜான் பண்டிகை உற்சாகம் - தலைவர்கள் வாழ்த்து

ரம்ஜான் பண்டிகை உற்சாகம் - தலைவர்கள் வாழ்த்து

webteam

ஈகைத் திருநாளாம் ரமலான் பண்டிகை தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அரசியல் தலைவர்கள் பலர் ரமலான் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

ரமலான் பண்டிகையையொட்டி சென்னையின் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்‌‌கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, அழகுற காட்சியளிக்கின்றன. காலையிலிருந்தே பள்ளி வாசல்கள் முன் திரளும் ஏராளமான இஸ்லாமியர்கள் ஒருவருக்கொருவர் கட்டித் தழுவி ரமலான் வாழ்த்துக் கூறி மகிழ்ந்தனர். புத்தாடை அணிந்தும் இனிப்புகளை மற்றவர்களுக்கு வழங்கியும் அவர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்நாளின் முக்கிய நிகழ்வான பெருநாள் தொழுகைக்கான சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. ரமலான் கொண்டாடும் இஸ்லாமியர்களுக்கு பிற மதத்தைச் சேர்ந்தவர்களும் ரமலான் வாழ்த்து கூறி வருகின்றனர்.

இந்நிலையில் ரம்ஜான் பண்டிகையையொட்டி, குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். குடியரசுத்தலைவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் தொண்டு, சகோதரத்துவம், இரக்கம் ஆகியவற்றை வளர்க்கும் பண்டிகை ரம்ஜான் என்று குறிப்பிட்டுள்ளார். தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் வாழ்த்துச் செய்தியில், கருணை, பெருந்தன்மை, சகிப்புத்தன்மை, இரக்கம் போன்ற குணங்களை கடைபிடிக்க ரம்ஜான் பண்டிகையில் உறுதியேற்போம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அனைவரிடத்திலும் அன்பு காட்டுங்கள் என்ற நபிகள் நாயகத்தின் போதனைகளை மனதில் கொண்டு வாழ உறுதியேற்போம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இஸ்லாமியர்களின் பொருளாதார முன்னேற்றத்துக்கு திமுக தொடர்ந்து செயலாற்றும் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனர் தலைவரும், பெரம்பலூர் எம்பியுமான பாரிவேந்தர், இறைதூதர் நபிகள் நாயகம் எடுத்துரைத்த நன்னெறிகளை மத பேதமின்றி அனைவரும் கடைபிடித்தால் உலகில் ஒற்றுமை தழைத்தோங்கி, நாடு வளம் பெறும் என்று தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். இதேபோல, வைகோ, திருமாவளவன், விஜயகாந்த் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.