ராமநாதபுரம் மாவட்டம் கோவிலாங்குளத்தை அடுத்த காத்தனேந்தல் பஞ்சாயத்தில் உள்ள பறையங்குளம் கிராமத்தைச் சேர்ந்த காளிமுத்து என்பவரின் மனைவி சித்ராதேவி, நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இவரை பிரசவத்துக்காக கோவிலாங்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்றிரவு அனுமதித்துள்ளனர். இந்நிலையில், அங்கு அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து மருத்துவர் இல்லாமல் செவிலியர் பிரசவம் பார்த்ததாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் சித்ரா தேவிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அதனைத் தொடர்ந்து அவருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்த செவிலியர், உடனடியாக அவரை பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார் அவர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தநிலையில், சிகிச்சை பலனின்றி சித்ராதேவி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதில் மனமுடைந்த உறவினர்கள் மற்றும் கிராம மக்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் இல்லாமல் செவிலியர் பிரசவம் பார்த்ததால் தான் தாய் உயிரிழக்க நேரிட்டது என்று கூறி தங்களுக்கு நியாயம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து சுமார் 200-க்கும் மேற்பட்டோர் ராமநாதபுரம் ராமேஸ்வரம் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இன்று மறியலில் ஈடுபட்டனர். இதனால் இருபுறமும் ஒருமணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்நிலையில் போலீசாருக்கும் கிராமத்து மக்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. பின் சமாதானம் செய்யப்பட்டதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இருப்பினும் மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.