தமிழ்நாடு

மாவட்டச் செயலாளர் பதவியிலிருந்து ராஜேந்திர பாலாஜி நீக்கம்

மாவட்டச் செயலாளர் பதவியிலிருந்து ராஜேந்திர பாலாஜி நீக்கம்

webteam

அதிமுக மாவட்டச் செயலாளர் பதவியிலிருந்து ராஜேந்திர பாலாஜி அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.


அதிமுக அமைச்சர்களில் அதிரடியான கருத்துகளை தெரிவித்து வருபவர் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. கடந்த சில வாரங்களுக்கு முன்னால் இவர், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியம் சுந்தரபாண்டியம் பேரூராட்சியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 72வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியிருந்தார். அப்போது, “ஜெயலலிதாவிற்கு 72 வயது, எம்.ஜிஆருக்கு 103 வயது என்று சொன்னால் நம்ப முடிகிறதா? நாம் பார்த்தது எல்லாம் அடிமைப்பெண் எம்.ஜி.ஆர்தான். அவர் இறக்கும் வரை அப்படியேதான் இருந்தார். வயதான தோற்றத்தில் அவரை காணவில்லை” என பேசி இருந்தார்.

மேலும் அவர், “எம்.ஜி.ஆர் வழியில் வந்தவர்கள் கூட்டத்தில் சவுண்டு கொடுக்கணும், விசில் அடிக்கணும், யாராவது ஓவரா பேசுனா கல்லை விட்டு எறியணும். அவர்தான் அதிமுககாரர். காங்கிரஸ்காரர்தான் அமைதியாக கைக்கட்டி உட்கார்ந்து இருப்பார்கள்”என அதிரடியாக பல கருத்துகளை முன்வைத்தார். அது அப்போது சர்ச்சையை எழுப்பியது.

இந்நிலையில், அதிமுக. மாவட்டச் செயலாளர் பதவியிலிருந்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திடீரென்று நீக்கப்பட்டுள்ளார். அஇஅதிமுக தலைமைக்கழகம் சார்பில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவரது ட்விட்டர் பக்கத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், கழக ஒருங்கிணைபபளரும் துணை முதல்வருமான ஒ.பன்னீர்செல்லம் மற்றும் கழக இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக முதல்வருமான எடப்பாடி கே பழனிசாமி ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அறிவிப்பு:

விருதுநகர் மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் பால்வளத்துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி, இன்று முதல் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார் எனக் கூறப்பட்டுள்ளது.