தமிழ்நாடு

“மழை வந்தாலே புகார்கள் வராது”- மழலையான கிரண் பேடி

“மழை வந்தாலே புகார்கள் வராது”- மழலையான கிரண் பேடி

webteam

இன்று பெய்த மழை தனது பழைய நினைவுகளை ஞாபகப்படுத்திவிட்டதாக புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியின் ஆளுநராக நியமிக்கப்பட்ட பின்னர், அம்மாநில தொடர்பாக வெளியாகும் அரசியல் செய்திகளில் எதிர்க்கட்சி ஆளுங்கட்சி மோதல்களை விட, ஆளுநர், முதல்வர் மோதல்களே அதிகம். அந்த அளவிற்கு காங்கிரஸ் கட்சி மற்றும் முதலமைச்சர் நாராயணசாமியுடன் கிரண் பேடி மோதலில் ஈடுபட்டு வருகிறார். இவரைக் கண்டாலே கறார் அதிகாரி என ஒதுங்கும் அளவிற்கு புதுச்சேரி அரசியல்வாதிகள் மாறிவிட்டனர். \

இந்த அளவிற்கு ஸ்ட்ரிக்ட் ஆஃபிஸர் ஆன கிரண் பேடி, ஒரு மழை பெய்தால் போதும் மழலையாக மாறிவிடுகிறார். பொதுவாகவே கிரண் பேடிக்கு மழை என்றால் பிரியம். எந்த அளவு கோபமான மனநிலை இருந்தாலும், ஒரு மழை அவரது மனதை லேசாக்கி விடும். இந்த அளவிற்கு அவருக்கு மழை பிடிக்கும் என்பது ஆளுநர் மாளிகையில் உள்ள அனைத்து அலுவலர்களுக்கும் தெரியும். 

கடந்த 28ஆம் ட்விட்டரில் ஒரு மழை பெய்யும் வீடியோவை பதிவு செய்த கிரண், மழை பெய்யும் சத்தத்தை ரசியுங்கள் என குறிப்பிட்டிருந்தார். இதேபோன்று அவ்வப்போது மழை குறித்து பதிவுகளை அவர் வெளியிட்டுள்ளார். இந்நிலையில் இன்று தமிழகம் வடக்கு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்து வருகிறது. புதுச்சேரி ஆளுநர் மாளிகையிலும் பெய்யும் இந்த மழையை கிரண் பேடி வீடியோவாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

அதில், “இந்த மழை இன்று என் பழைய ஞாபங்களை நினைவுப்படுத்திவிட்டது. 1974ஆம் ஆண்டை நான் நினைக்கிறேன். நான் அப்போது பயிற்சி அலுவலகத்தில் பணிகளை மேற்கொண்டிருந்தேன். அப்போதும் மழை பெய்தது. நான் அப்போது நிம்மதியாக உணர்ந்தேன். ஏனென்றால் மழை பெய்யும் சமயத்தில் புகார்களே வராது. நாம் அந்நேரத்தில் சற்று ஓய்வெடுக்கலாம். நான் சொன்னதைக் கேட்டு எனது தயாரிப்புக் குழு இந்த மழை வீடியோவை பதிவு செய்துள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார்.