QR code pt desk
தமிழ்நாடு

உதகை: மரங்களின் வரலாற்றை அறிய QR Code வசதி - தோட்டக்கலைத் துறையின் அசத்தல் முயற்சி!

உதகையில் உள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த மரங்களின் வரலாற்றை அறிந்து கொள்ள, மரங்களில் கியூஆர் கோடு ஒட்டப்பட்டு வருவது இயற்கை ஆர்வலர்களிடம் வரவற்பை பெற்றுள்ளது.

webteam

நீலகிரி மாவட்டம் உதகை அரசு தாவரவியல் பூங்கா அமைக்கும் பணி 1848 ஆம் ஆண்டு தொடங்கி 1867 ஆம் ஆண்டு முடிக்கப்பட்டது. ஆரம்பத்தில் ஆங்கிலேயருக்குத் தேவையான காய்கறிகளை சாகுபடி செய்யவே இந்த பூங்கா அமைக்கப்பட்டது. ஆனால், மெக் ஐவர் என்ற ஆங்கிலேயர் இங்கிலாந்தில் உள்ள 'க்யூ' பூங்காவை போன்று அமைக்க ஆசைபட்டு இந்த பூங்காவில் ஐரோப்பிய நாடுகளிலிருந்து கொண்டுவரப்பட்ட மரம் மற்றும் செடிகளை நட்டார். அதன் பிறகு ஜப்பான், ஆஸ்திரிலேயா, கேனரி ஐலேண்ட போன்ற நாடுகளிலிருந்து பிரபலமான மரங்களை கொண்டுவந்து நட்டனர்.

Botanic Garden

இப்போது இந்த நூறு ஆண்டு பழமையான மரங்கள் மற்றும் மூலிகை செடிகள் அறிவியல் மாணவர்களுக்கு என்சைக்லோ பீடியாவாகவும், சுற்றுலா பயணிகளின் சொர்க்க பூமியாகவும் உள்ளன. உதகை பூங்காவை ஆண்டுதோறும் 30 லட்சம் சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு வருகின்றனர். உதகை பூங்காவின் அழகை ரசிக்கும் சுற்றுலா பயணிகள் மரங்களின் உயரத்தை பார்த்து ஆச்சரியப்படுகின்றனர். ஆனால், அவற்றின் வரலாறு குறித்து அறியும் வசதி இருக்கவில்லை என்பதால் சிரமப்பட்டு வந்தனர். இதை கருத்தில் கொண்டு பூங்கா நிர்வாகத்தினர் கியூஆர் கோடு அறிமுகம் செய்துள்ளனர்.

இதற்காக மரங்கள், தாவரங்கள் குறித்த தகவல்களை வலைதளத்தில் பதிவிட்டு, அதை கியூஆர் கோடு முறையில் காண ஏற்பாடு செய்துள்ளனர். அந்த Code-ஐ மரத்தில் ஒட்டியுள்ளனர். சுற்றுலா பயணிகள் தங்கள் செல்போன் மூலம் அந்த Code-ஐ ஸ்கேன் செய்தால் அந்த மரம் எங்கிருந்து கொண்டுவரப்பட்டது, எப்போது நடவு செய்யபட்டது, எந்த நாட்டைச் சேர்ந்தது, இவற்றின் மூலிகை தன்மை என்ன என்பது குறித்தெல்லாம் சுற்றுலா பயணிகள் அறிந்து கொள்ளலாம்.

QR code

இதுகுறித்து தாவரவியல் பூங்கா இணை இயக்குனர் சிபிலா புதிய தலைமுறையிடம் கூறும் போது, “பூங்காவிற்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருவதால் அவர்கள் பூங்காவில் உள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த மரங்களைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். அதற்காக தமிழ் மட்டுமல்லாமல் ஆங்கிலத்திலும் மரங்கள் குறித்து அறிய இந்த க்யூஆர் கோடு மூலம் வசதிகள் செய்துள்ளோம். பூங்காவில் உள்ள ஜப்பான் ரோஸ் என்றழைக்கப்படும் கமாலியா, டிராகன் மரம், குரங்கு ஏறா மரம், ருத்ராட்சை மரங்களில் இவை பொருத்தப்பட்டுள்ளன. முதல் கட்டமாக 100 மரங்களுக்கும் பின்னர் 1,000 மரங்களுக்கும் க்யூஆர் கோடுடன் பெயர் பலகை வைக்கப்படும்” என்று கூறினார்.

நூற்றாண்டு பழமை வாய்ந்த இம்மரங்களைப் பற்றி இயற்கை ஆர்வலர்கள், மாணவ, மாணவியர் அறிந்து கொள்ள தோட்டக்கலைத் துறையினர் மேற்கொண்டுள்ள இந்த முயற்சி பலரின் பாராட்டை பெற்றுள்ளது.