தமிழ்நாடு

காதல் மனைவியை என்னோடு சேர்த்து வையுங்க – போலீசில் புகார் அளித்த மாற்றுத்திறனாளி காதலன்

காதல் மனைவியை என்னோடு சேர்த்து வையுங்க – போலீசில் புகார் அளித்த மாற்றுத்திறனாளி காதலன்

webteam

விபத்தில் மாற்றுத் திறனாளியாக மாறிய காதலனை கரம்பிடித்த காதலியால் பிரித்து சென்ற உறவினர்கள் கலங்கி நிற்கும் காதலனின் கண்ணீர் கதை...

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள கேசவனேரியைச் சேர்ந்த முருகன் என்பவரின் மகன் பிரகாஷ் (25) தொழிற்கல்வி படித்த இவர், சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில், இவரும் வள்ளியூர் அருகே உள்ள வள்ளியம்மாள் புரத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவரின் மகள் திவ்யா (22) இருவரும் கடந்த ஐந்து வருடமாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இருவரின் பெற்றோர்களும் இதனை கண்டு கொள்ளவில்லை என கூறப்படுகிறது.

இதையடுத்து கடந்த இரண்டு வருடத்திற்கு முன்பே பிரகாஷ் சென்னையில் இருந்து இருசக்கர வாகனத்தில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது ஏற்பட்ட விபத்தில் அவரது இரண்டு கால்களும் செயலிழந்துவிட்டன. இருந்த போதிலும் திவ்யாவும் பிரகாஷும் தொடர்ந்து காதலித்து வந்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்த நிலையில்; திவ்யாவின் பெற்றோர் திருமணத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் இருவரும் கடந்த 20 ஆம் தேதி திருமணம் செய்ய முடிவு செய்து காதலர்கள் இருவரும் பிரகாஷின் வீட்டில் வைத்து பிரகாஷின் பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணம் நடந்ததை கேள்விப்பட்ட திவ்யாவின் பெற்றோர், பிரகாஷின் வீட்டிற்குச் சென்று தகராறில் ஈடுபட்டனர். பிரகாஷை சரமாரியாக தாக்கி வீட்டில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கி திவ்யாவை தரதரவென அடித்து இழுத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் காயமடைந்த பிரகாஷை அக்கம் பக்கத்தினர் மீட்டு வள்ளியூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து பிரகாஷ் வள்ளியூர் காவல் நிலையத்தில் தனது காதல் மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து பிரகாஷிடம் கேட்டபோது... நாங்கள் இருவரும் கடந்த ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்தோம். எனக்கு விபத்து ஏற்பட்ட பின்பும் திவ்யா அடிக்கடி எங்கள் வீட்டிற்கு வந்து என்னை நன்றாக கவனித்துக் கொண்டார் நாங்கள் இருவரும் மனமுவந்து திருமணம் செய்து கொண்டோம்.

இது அவரது பெற்றோருக்கு பிடிக்கவில்லை. ஆகையால், அவர்கள் என்னையும் தாக்கிவிட்டு திவ்யாவையும் அடித்து இழுத்துச் சென்றுள்ளனர். திவ்யாவை மீட்டுத்தர வேண்டும் என காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன். போலீசார் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்று வேதனையுடன் கூறினார்.