தமிழ்நாடு

அதிருப்தியில் இருக்கிறாரா தங்க தமிழ்செல்வன்? - புகழேந்தி விளக்கம்

அதிருப்தியில் இருக்கிறாரா தங்க தமிழ்செல்வன்? - புகழேந்தி விளக்கம்

webteam

தங்கத் தமிழ்செல்வன் திட்டமிட்டு பேசுவது போல்தான் தெரிகிறது என அமமுகவின் புகழேந்தி தெரிவித்துள்ளார். 

அதிமுக இரண்டு அணிகளாகப் பிரிந்தது முதல், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கி நடத்துவது வரையிலும் டிடிவி தினகரனின் நம்பிக்கைக்குரியவராக, தங்க தமிழ்ச்செல்வன் இருந்தார். தேனி மாவட்டத்தைச் சேர்ந்த இவர், அமமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டார். கடந்த மக்களவைத் தேர்தலில் தேனி தொகுதி யில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மகனை எதிர்த்தும் களம் கண்டார். 

தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்தாலும் தொடர்ந்து அமமுகவிற்காக களப்பணியாற்றி வந்தார். இந்நிலையில் அவர் தொலைபேசியில் டிடிவி தினகரனை கடுமையாக விமர்சிக்கும் ஒலிப்பதிவு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதுகுறித்து தங்க தமிழ்செல்வனிடம் புதிய தலைமுறை கருத்து கேட்டபோது, ‘’கட்சியை பற்றி நான் பேசியது உண்மைதான். நான் நேர்மையானவன். சில விஷயங்களை மாற்ற வேண்டும், சரிபண்ணுங்கள் என்று சொன்னேன். அதைக் கண்டிக்காமல், சமூக வலைத்தளங்களில் தவறானச் செய்தியை வெளியிடும் போது மனது கஷ்டமாக இருக்கிறது. எனது கோரிக்கையை ஏற்கவில்லை என்றால் என்னைக் கட்சியில் இருந்து நீக்க வேண்டியது தானே. என்னை பற்றி அவதூறு பரப்புவது ஏன்? இதற்கு மேல் இதுபற்றி கருத்துதெரிவிக்க விரும்பவில்லை’’ எனத் தெரிவித்தார். 

இதுகுறித்து அமமுகவின் புகழேந்தி கூறுகையில், “தேனி தொகுதியில் இருந்து நேற்றைய தினம் பலர் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டனர். அப்போது தங்க தமிழ்செல்வன் தவறாக பேசிவிட்டார். அவரை கட்சியில் இருந்து டிடிவி தினகரன் நீக்கி விட போகிறார். அவரிடம் எடுத்து கூறுங்கள். இனி தங்க தமிழ்செல்வன் அதுபோன்று நடந்து கொள்ள மாட்டார் என வேதனையோடு தெரிவித்தனர். ஆனால் இப்போது கூட அவர் வருத்தப்படாமல் வார்த்தைகளை அள்ளி வீசுகிறார். தெரியாமல் சொல்லிவிட்டேன் என வருத்தப்பட்டிருந்தால் நான் பாராட்டியிருப்பேன். ஆனால் ஏன் என்னை கட்சியில் இருந்து நீக்கவில்லை என்று கேள்வி எழுப்புவதால் இது திட்டமிட்டு பேசுவது போல்தான் தெரிகிறது. 

பலமான வார்த்தைகளை நானும் பயன்படுத்த முடியும். ஆனால் பழகியவர் என்பதால் இருக்கிறேன். இவர் இதுபோன்று பேசுவது தேவையற்றது. அதிமுகவில் யாரும் தங்க தமிழ்செல்வனை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். ஒரு கட்சியை பாதிப்படைய செய்பவர்களை யாரும் ஆதரிக்கமாட்டார்கள்.” எனத் தெரிவித்தார்.