புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு மதுக்கடைகளில் போதிய மதுபாட்டில்கள் இல்லாததால் மது குடிப்பவர்கள் மது வாங்க வந்து விட்டு ஏமாற்றத்தோடு திரும்பி செல்கின்றனர்.
உச்சநீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 143 அரசு மதுபானக் கடைகளில் 142 அரசு மதுபானக் கடைகள் இன்று திறக்கப்பட்டன. விராலிமலை அருகே உள்ள தேங்காய்திண்ணிப்பட்டியில் உள்ள அரசு மதுபானக்கடை மட்டும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் காரணமாக இன்று திறக்கப்படவில்லை.
நேற்று மாலை உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில் அரசிடமிருந்து அதிகாரப்பூர்வமான ஆணை வருவதில் காலதாமதம் ஏற்பட்டதால் டாஸ்மாக் குடோன்களில் இருந்து கடைகளுக்கு மதுபாட்டில்களை நேற்று இரவு கொண்டு செல்ல முடியாமல் போனதாக தெரிகிறது. இதனால் இன்று காலை முதலே குடோன்களில் இருந்து அந்தந்த மதுபானக் கடைகளுக்கு மதுபாட்டில்கள் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறன.
புதுக்கோட்டை உள்ளிட்ட நகர்ப்புறங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு மதுபாட்டில்கள் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் கிராமப்பகுதிகளில் உள்ள பல்வேறு கடைகளுக்கு இன்னும் மதுபானங்கள் வந்து சேரவில்லை. இதனால் மதுபானங்களை வாங்க வரும் மது குடிப்பவர்கள் மது கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். சிலர் டோக்கன்களை பெற்றுக்கொண்டு மதுபானங்கள் வந்தபிறகு வாங்கிச் செல்லலாம் என கடை வாசலிலேயே காத்திருக்கின்றனர்.
ஆலங்குடி அருகே உள்ள வடகாடு, மாங்காடு, புள்ளான்விடுதி, கீரமங்கலம் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஐம்பதிற்கும் மேற்பட்ட கடைகளுக்கு மதுபானங்கள் இன்னும் வந்து சேரவில்லை.
சில கடைகளில் பீர் பாட்டில்கள் மட்டும் உள்ளதாலும் சில கடைகளில் விலை உயர்ந்த மது பாட்டில்கள் மட்டும் உள்ளதாலும் அதனையும் வாங்க முடியாமல் மது குடிப்பவர்கள் நீண்ட நேரமாக காத்துள்ளனர். மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து அனைத்து மதுபான கடைகளுக்கும் விரைந்து மதுபாட்டில்களை அனுப்பி வைக்க வேண்டும் என்பது மது குடிப்பவர்களின் கோரிக்கையாக உள்ளது.