Madurai High Court PT Desk
தமிழ்நாடு

அரசுப் பேருந்தில் காயமடைந்த மருத்துவர் - இழப்பீடு வழங்க உத்தரவிட்ட நீதிமன்றம்: நடந்தது என்ன?

அரசு போக்குவரத்து பேருந்தில் பயணம் செய்த போது, தூக்கி வீசப்பட்டதில் முதுகெலும்பு பாதிக்கப்பட்ட மருத்துவருக்கு இழப்பீடு வழங்குமாறு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

PT WEB

புதுக்கோட்டையைச் சேர்ந்த மருத்துவர் சதீஷ், கடந்த 2015 டிசம்பர் 23 அன்று சென்னை திருச்சி செல்லும் அரசு போக்குவரத்து கழக பேருந்தில் பயணம் செய்தார். பெரம்பலூர் அருகே பேருந்து வந்த போது, ஓட்டுநரின் வேகம் காரணமாக இருக்கையிலிருந்து கீழே விழுந்த சதீஷ், கம்பி வளையத்தில் மோதியதில் முதுகுத்தண்டு பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர், அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை மேற்கொண்டார்.

Bus

இந்த நிலையில் அவர், தனது முதுகெலும்பு பாதிப்பிற்கு காரணமான தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் தனக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என புதுக்கோட்டை மோட்டார் வாகன தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த விசாரணையில் வழக்கு பதிவு மற்றும் ஆவணங்கள் அனைத்தும் ஆராயப்பட்டதுடன், ஓட்டுநர் பேருந்தை தவறாக ஓட்டியதால் விபத்து ஏற்பட்டதாக தீர்ப்பாயம் முடிவெடுத்தது.

மேலும் மருத்துவருக்கு 40 சதவீதம் முதுகுத்தண்டு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அரசு மருத்துவர்கள் சான்றிதழ் அளித்துள்ளனர். ‘இவற்றை வைத்து பார்க்கும் போது, பாதிக்கப்பட்ட மருத்துவருக்கு, அரசு போக்குவரத்து கழகம் 6.44 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்' என தீர்ப்பாயம் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து திருச்சி அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குநர் தரப்பில் மதுரைக்கிளையில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

BUS

அதில், "பேருந்துகளில் இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்பட வாய்ப்பில்லை. மருத்துவர் சதீஷுக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தால், அதில் பயணம் செய்த மற்ற பயணிகளும் பாதிக்கப்பட்டிருக்க வேண்டும். மேலும் மற்ற பயணிகளும் பேருந்தில் ஓட்டுநரிடம் கேள்வி கேட்டிருப்பர். எனவே தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும்" என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி விஜயகுமார், "மருத்துவ அறிக்கையில் சதீஷ்க்கு முதுகுதண்டில் பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக அவருக்கு 40 சதவீதம் பாதிப்புள்ளதும் தெரிய வருகிறது. எனவே, புதுக்கோட்டை மோட்டார் வாகன தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பில் தலையிட நீதிமன்றம் விரும்பவில்லை" எனக்கூறி, மனுவை தள்ளுபடி செய்தார். இதன்மூலம் திர்ப்பாயத்தின் தீர்ப்பை மதுரைக்கிளை உறுதிசெய்தது.