தமிழ்நாடு

`மத்திய அரசின் ஒத்துழைப்போடு, புதுச்சேரி அரசு முன்னெறி செல்கின்றது’- தமிழிசை பெருமிதம்

`மத்திய அரசின் ஒத்துழைப்போடு, புதுச்சேரி அரசு முன்னெறி செல்கின்றது’- தமிழிசை பெருமிதம்

webteam

"பிரதமரின் பொருளாதார ஆலோசனைக்குழு வெளியிட்டுள்ள வளர்ச்சிகுறியீட்டில் 65.89 சதவீதம் பெற்று நாட்டில் முதல் மாநிலமாக புதுச்சேரி திகழ்கின்றது" என தேசிய கொடியேற்றிவைத்த புதுச்சேரி ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனின் குடியரசு உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

74ஆவது குடியரசு தினவிழா புதுச்சேரி கடற்கரையில் நடைபெற்றுது. அதில் துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தேசியக்கொடி ஏற்றி வைத்து, காவல் துறையின் பல்வேறு படைப்பிரிவினர் மற்றும் என்.சி.சி மாணவர்கள் உள்ளிட்ட பள்ளி மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள், அனைத்துகட்சி எம்.எல்.ஏக்கள், தலைமை செயலாளர், டிஜிபி, உள்ளிட்ட உயரதிகாரிகள், பிரெஞ்சு தூதரக அதிகாரிகள் பங்கேற்றனர். தெலுங்கானாவில் தேசியக்கொடியேற்றி வைத்துவிட்டு தனிவிமானம் மூலம் தமிழிசை செளந்தரராஜன் புதுச்சேரிக்கு வந்தடைந்திருந்தார். வானிலை காரணமாக விமானம் தாமதமானதால் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு 1 மணி நேரம் தாமதமாக வந்தார். அதற்கு பின்னர் கொடியேற்றம் நடைபெற்றது.

இந்நிலையில் குடியரசு தினவிழா நிகழ்ச்சியின் ஒருபகுதியாக, குடியரசு தலைவரின் காவல் பதக்கம் 4 காவல் துறை அதிகாரிகளுக்கும், மத்திய உள்துறை அமைச்சரின் காவல் பதக்கம், துணைநிலை ஆளுநரின் காவல் பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. அதே போன்று பள்ளி இறுதித்தேர்வுகளில் சாதனை புரிந்த பள்ளிகளுக்கு முதலமைச்சரின் சுழற்கேடயங்கள் மற்றும் நினைவுப்பரிசுகள் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து அரசின் சாதனைகளை விளக்கும்விதமாகவும், புதுச்சேரியில் ஜி.20 மாநாடு நடத்துவது தொடர்பான தகவலை பரப்பும் வகையிலும், அனைத்து அரசு துறைகளின் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு நடைபெற்றது. வண்ணமயமாக நடைபெற்ற விழாவில் ஜி.20 நாடுகளின் கொடிகளை ஏந்தியவாறு நிகழ்ந்த ஊர்வலம் மற்றும் பள்ளி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

இந்த குடியரசு தினவிழாவையொட்டி ஆளுநர் வெளியிட்ட உரை குறிப்பில், “பிரதமரின் பொருளாதார ஆலோசனைக்குழு வெளியிட்டுள்ள வளர்ச்சிகுறியீட்டில் 65.89% சதவீதம் பெற்று நாட்டில் முதல் மாநிலமாக புதுச்சேரி திகழ்கின்றது. மாற்றுத்திறனாளிக்களுக்கான எரிபொருள் மானியம் லிட்டருக்கு ரூ.61ல் இருந்து ரூ.91 ஆக உயர்த்தபட்டுள்ளது. புதுச்சேரியில் மூடப்பட்டுள்ள ரேஷன் கடைகளை திறந்து அரிசி விநியோகிக்க மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்து கழகத்திற்கு புதிய பேருந்துகள் வாங்க ரூ.12 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் புதுச்சேரியில் 2022-23 ஆண்டில் தனிநபர் ஆண்டு வருமானம் ரூ.2,44,470 ஆக கணக்கிடப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டது.

`உயரும் இந்நோக்கம் நிறைவுற இணக்கம் ஒன்றுதான் மார்க்கம்’ என்ற மகாகவி பாரதியாரின் வரிகளின் வழியே மத்திய அரசின் ஒத்துழைப்போடு, புதுச்சேரி அரசு வளர்ச்சிப் பாதையை நோக்கி முன்னெறி செல்கின்றது” என ஆளுநரின் உரையில் குறிப்பிடப்பட்டது. முன்னதாக ஆளுநராக தெலங்கானாவில் தமிழிசை சௌந்தரராஜன் பங்கேற்ற குடியரசு தினவிழாவில், அரசியல் மோதலால் தவிர்த்திருந்தார் அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ்.