புதுக்கோட்டையில் 5ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் வகுப்பறையிலேயே திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் பிள்ளவயல் கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் 5ஆம் வகுப்பு படிக்கும் மணிகண்டன் என்ற மாணவன் சந்தேகத்திற்குரிய வகையில் உயிரிழந்துள்ளான். மூக்கில் அடிபட்டு மயங்கிய நிலையில் இருந்த மாணவனை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பள்ளி நிர்வாகத்தினர் கொண்டு சென்றுள்ளனர். மணிகண்டனை பரிசோதித்த மருத்துவர்கள் அவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து மணிகண்டனின் உடல் அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மணிகண்டனுக்கு மூக்கில் அடிபட்டிருந்தது குறித்து பள்ளி தரப்பில் உரிய பதில் அளிக்கவில்லை என கூறி அறந்தாங்கி அரசு மருத்துவமனை எதிரே உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பள்ளி சிசிடிவி கேமரா பதிவுகளை கொண்டு விசாரணை நடத்தப்படும் என காவல்துறையினர் உறுதியளித்ததை அடுத்து மாணவனின் உறவினர்கள் மறியலை கைவிட்டனர்.