தமிழ்நாடு

ராமநாதசுவாமி கோயில் உண்டியலில் கோடிகளில் குவிந்த காணிக்கை! புதிய உச்சத்தில் காணிக்கை!

ராமநாதசுவாமி கோயில் உண்டியலில் கோடிகளில் குவிந்த காணிக்கை! புதிய உச்சத்தில் காணிக்கை!

webteam

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை எண்ணப்பட்டதில் 2 கோடியே 6 லட்சத்து 66 ஆயிரம் ரூபாய் கோவிலுக்கு வருவாய் கிடைத்துள்ளது. உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக அளித்த தங்கம், வெள்ளி குறித்த எடை விபரத்தை திருக்கோவில் நிர்வாகம் ஏன் வெளியிடவில்லை என பக்தர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

உலக புகழ்பெற்ற ராமேஸ்வரம் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். கடந்த ஒரு மாதத்தில் வார விடுமுறை, சர்வ அமாவாசை, ஐயப்ப பக்தர்கள் வருகை என ஆயிரக்கணக்கான பக்தர்கள் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில்களில் சுவாமி தரிசனம் செய்து உண்டியல் காணிக்கை செலுத்தினர். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் மற்றும் உப கோவில்களில் உள்ள அனைத்து உண்டியல்கள் திறக்கப்பட்டு, அந்த உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்த அனைத்து ரூபாய் நோட்டு மற்றும் சில்லரை காசுகள் கோவில் திருக்கல்யாண மண்டபத்திற்கு கொண்டு வரப்பட்டன.

அங்கு கோவில் இணை ஆணையர் தலைமையில் உதவி ஆணையர்கள் மேற்பார்வையில் திருக்கோவில் பணியாளர்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் காணிக்கை பணத்தை கடந்த இரண்டு நாட்களாக எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில் "கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ராமேஸ்வரம் கோவில் உண்டியலில் காணிக்கையாக 2 கோடியே 6 லட்சத்து 66 ஆயிரம் ரூபாய் கிடைத்தது. உண்டியலில் கிடைத்த தொகையை திருக்கோவில் நிர்வாகம் அம்மன் சன்னதி நுழைவு வாயிலில் அறிவிப்பு பலகை ஒன்றை வைத்து அதில் உண்டியலில் காணிக்கையாக 2 கோடி ரூபாய் கிடைத்துள்ளது" என எழுதி வைத்துள்ளது.

திருக்கோயில் உண்டியல் எண்ணும் போது அதில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய தங்கம், வெள்ளி மற்றும் வெளிநாட்டு பணம் இருப்பது வழக்கம். ஆனால், இந்த முறை தங்கம் மற்றும் வெள்ளி குறித்து எந்த தகவலும் அறிவிப்பு பலகையில் இல்லாததால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

ராமநாதசுவாமி திருக்கோயில் ஊழியர்கள் வைப்பு நிதியில் கோடிக்கணக்கில் முறைகேடு, டிக்கெட் மெஷின் காணாமல் போனது, சுவாமி நகை எடை குறைவு உள்ளிட்ட பல புகார்கள் அடுத்தடுத்து எழுந்த வண்ணம் உள்ள நிலையில், தற்போது உண்டியல் காணிக்கையாக கிடைத்த தங்கம், வெள்ளி எடை எவ்வளவு என்ற தகவல் இல்லாதது உள்ளூர் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் மத்தியில் கூடுதல் சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

திருக்கோயில் நிர்வாகம், உடனடியாக உண்டியலில் கிடைத்த தங்கம் மற்றும் வெள்ளி எடையை தெரிவிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் உண்டியல்களில் பக்தர்கள் அளித்த காணிக்கை தொகை 2 கோடியை தாண்டியுள்ளது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.