கடலூர், நாகை மாவட்டங்களின் 49 கிராமங்களை பெட்ரோலிய மண்டலமாக தமிழக அரசு கடந்த வாரம் வரையறை செய்து அறிவித்தது. கிட்டதட்ட ஏழு ஆண்டுகளாக கிடப்பில் இருந்த இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டால், கடலூர், நாகை கடலோர கிராமங்கள் அழியும் நிலை ஏற்படும் என்று குரல்கள் எழுந்துள்ளன.
கடலூர் மாவட்டத்தில் தைகால்தோணித்துறை தொடங்கி நாகை மாவட்டத்தில் மாமகுடி கிராமம் வரை 49 கிராமங்களில் 265 சதுர கி.மீ. பரப்பில் பெட்ரோலிய முதலீட்டு மண்டலம் வரையறுக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் 29 மீனவ கிராமங்களும் நாகை மாவட்டத்தில் 20 கிராமங்களும் இதில் அடங்கும். சுற்றுச்சூழலை பாதிக்கும் என ஐரோப்பிய நாடுகளில் தடை செய்யப்பட்ட பெட்ரோலிய சுத்திகரிப்பு மையங்களை தமிழகத்தில் கொண்டுவருவதால் மாசுபாடு அதிகரிக்கும் என்று அச்சம் தெரிவிக்கிறார்கள் இப்பகுதி மக்கள்.
கடலூரில் காற்று, நீர், நிலம் அனைத்தும் 2 ஆயிரம் மடங்கு மாசு உள்ளதாக பல ஆய்வுகளில் குறிப்பிட்டுள்ள நிலையில், புதிதாக பெட்ரோலிய மண்டலம் அமைக்கப்படுவது மீனவர்கள், விவசாயிகள் என ஒட்டுமொத்த வாழ்வாதாரத்தை பாதிக்கும் என்கிறார்கள் இப்பகுதி மக்கள். இதற்கிடையே தமிழகத்தில் பெட்ரோலிய மண்டலம் அமைக்கும் முயற்சியால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படாது என்றும் உள்ளூர் மக்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டுள்ளதாகவும் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ் தெரிவித்துள்ளார். இதன்மூலம் வேலைவாய்ப்பு உருவாகும் என்றும் தொழில்துறை வளர்ச்சி பெறும் என்றும் தர்மேந்திர பிரதாப் யாதவ் கூறியுள்ளார்.