தமிழ்நாடு

சொத்து வரி செலுத்தாத ஹோட்டல்களா?.. பாய்கிறது ஜப்தி நடவடிக்கை!

சொத்து வரி செலுத்தாத ஹோட்டல்களா?.. பாய்கிறது ஜப்தி நடவடிக்கை!

ஜா. ஜாக்சன் சிங்

நீண்ட நாட்களாக சொத்து வரி செலுத்தாத வணிக நிறுவனங்கள், ஹோட்டல்கள் மீது ஜப்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

சென்னை மாநகராட்சியின் வரி வருவாயில், சொத்து வரி முக்கிய பங்கு வகிக்கிறது. இந்நிலையில், அதிக வரி பாக்கி உள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்தது. அதன்படி, சமீபகாலமாக அதிக சொத்து வரி நிலுவை வைத்திருக்கும் கட்டிடங்களுக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, ரூ.10 லட்சத்திற்கு அதிகமாக சொத்து வரி பாக்கி உள்ளவர்களின் பட்டியலை சென்னை மாநகராட்சி தயார் செய்து, சம்பந்தப்பட்ட சொத்துக்களை சென்னை மாநகராட்சி ஜப்தி செய்தது.

நீண்ட நாட்களாக சொத்து வரி செலுத்தாத 3 திருமண மண்டபங்கள், 6 ஹோட்டல்கள், 1 திரையரங்கம், 1 மருத்துவமனை, 4 வணிக வளாகங்கள் மற்றும் 107 வணிக அங்காடிகளுக்கு சீல் வைக்கப்பட்டும், 63 பெரிய நிறுவனங்களின் கட்டடங்களுக்கு முன்பாக ஜப்தி அறிவிப்பு வைக்கப்பட்டும் நிலுவை வரியினை உடனடியாக செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கையின் காரணமாக சொத்து வரியினை நீண்ட நாட்களாக செலுத்தாத நிறுவனங்கள் தங்களது சொத்து வரி நிலுவையினை செலுத்தியுள்ளன. இதனால் கடந்த 15 நாட்களில் மட்டும் ரூ.40 கோடி சொத்து வரி வசூலிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நீண்டகாலமாக சொத்து வரி செலுத்தாமல் இருக்கும் ஹோட்டல்கள், வணிக வளாகங்கள் மீது ஜப்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.