தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட தனியார் மருத்துவமனைகளில் மருத்துவக் கழிவுகள் முறைப்படி அழிக்கப்படாமல், குப்பையோடு குப்பையாக சேர்த்து வீசுவதாக புகார் எழுந்துவந்தன. புகாரின்பேரில் இதனை கண்காணித்த மாநகராட்சி சுகாதார பிரிவு அதிகாரிகள், நேற்று நேரில் சென்றும் விசாரித்தனர். அப்போது குற்றம் உறுதியானது.
இதனையடுத்து தாம்பரம் மாநகராட்சி சுகாதாரத்துறை துப்புரவு ஆய்வாளர் சிவக்குமார் தலைமையில் இயங்கிய ஊழியர்கள் தகுந்த ஆதாரங்களை திரட்டினர். அதன்பேரில் குறிப்பிட்ட ஒரு மருத்துவமனை நிர்வாகத்திற்கு, ஒரு லட்சம் ரூபாய் அபராதம் கட்டும்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
“இதுபோல் பொது சுகாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் செயலில் ஈடுபடும் மருத்துவமனை நிர்வாகத்திற்கு முதல் முறை அபராதம் விதிக்கப்படும்; தொடர்ச்சியாக ஈடுபட்டால் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என மாநகராட்சி அதிகாரிகள் எச்சரித்தனர்.