pm modi parivendhar pt desk
தமிழ்நாடு

IJK நிறுவனத் தலைவர் பாரிவேந்தர் எம்.பி பிறந்தநாள் - குடியரசுத் தலைவர், பிரதமர் உட்பட பலர் வாழ்த்து!

இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனத் தலைவரும், பெரம்பலூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான பாரிவேந்தருக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

webteam

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில், ‘பாரிவேந்தர் நல்ல உடல் நலத்தோடும் மகிழ்ச்சியோடும் பல்லாண்டு வாழ்ந்து நாட்டுக்கு ஆற்றிவரும் சேவையை தொடர வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

இதேபோல் ‘பாரிவேந்தர் ஆற்றிவரும் சமூக நலப்பணிகள் அவரது வாழ்வை மேலும் பிரகாசமாக்கட்டும்’ என்று வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, ‘பாரிவேந்தரின் அனுபவமும் முயற்சிகளும் நாடு மேன்மையடைய உதவட்டும்’ என கூறியுள்ளார்.

parivendhar birthday

பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில், ‘தேசத்தை வளர்ப்பதில் இதே உறுதி மற்றும் வைராக்கியத்துடன் பாரிவேந்தர் செயல்பட வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல் ‘பாரிவேந்தரின் தனித்துவமிக்க செயல்பாடுகள் அனைவருக்கும் முன்னுதாரணம்’ என ஜார்கண்ட் மாநில ஆளுநர் சிபி.ராதாகிருஷ்ணன் வாழ்த்து கூறினார்.

இதற்கிடையே சென்னையை அடுத்த காட்டாங்குளத்தூரில் எஸ்ஆர்எம் தமிழ்ப்பேராயம் சார்பில் நடைபெற்ற பாரிவேந்தரின் பிறந்தநாள் விழா மற்றும் சேவை திருநாள் விழாவில் பங்கேற்ற குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், விழா மலரை வெளியிட்டார். அதனை பெற்றக் கொண்ட டாக்டர் மாதுரை சத்திய நாராயணன் மலரின் சிறப்பு அம்சங்களை விளக்கிப் பேசினார். அதேபோல் தவத்திரு மயிலம் சிவஞானம் பாலைய சுவாமிகள் முன்னிலை உரையும், தாளாளர் ஹரிணி ரவி துவக்க உரையும் ஆற்றினர்.

parivendhar

இந்த விழாவில் தொழில் அதிபர்கள் நல்லி குப்புசாமி, வீ.ஜி.சந்தோஷம், தமிழறிகர்கள் சாரதா நம்பி ஆரூரன், பேராசிரியர் ஞான சம்பந்தம், திரைப்பட இயக்குனர் ஆர்.கே.செல்வமணி, பாடலாசிரியர் அறிவுமதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

நிகழ்ச்சியில் டாக்டர் டி. ஆர். பாரிவேந்தர் எம். பி. ஏற்புரை நிகழ்த்தி பேசுகையில், “என் பிறந்தநாளை 3 நாட்கள் நிகழ்வாக நடத்துவது, நானே எதிர் பார்க்காத ஒன்று. இந்த நிகழ்வுக்கு நான் தகுதியானவரா என எண்ணி பார்க்கிறேன். என்னோடு பலகாலம் பழகி, பேசி, பகிர்ந்து கொண்டவர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றிருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. நான் ஊழியர்களை மதிக்கக்கூடியவன், எனக்கு மகிழ்ச்சி அளிக்கும் இன்னொன்று இந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் என்னுடன் இணைந்திருப்பது. என் வாழ்க்கையில் தொடர்ந்து சேவை செய்யும் வாய்ப்பை எனக்கு இறைவன் அளித்துள்ளார். எனக்கு கிடைக்கும் வாழ்த்துகள், எனக்கானது மட்டுமல்ல; உங்களுக்குமானதுதான்.

நான் நாட்டில் பல அரசியல் தலைவர்களை சந்தித்து உள்ளேன், பேசியுள்ளேன், பழகி உள்ளேன். அதில் நான் பெருமைப்படும் ஒரு தலைவர் என்றால், அது நாட்டின் மீது பற்றுள்ள ஒரே தலைவரான பிரதமர் மோடி மட்டுமே. அவர் நாடாளுமன்றத்திற்கு வரும்போது அதன் வாயிற்படியில் சிரம்தாழ்த்தி வணங்கி வருகிறார். இதுபோல எந்த தலைவரும் செய்தது இல்லை.

நாட்டு மக்களுக்கு சேவை செய்ய அரசியல் அவசியம், நான் காலம் தாழ்த்தி அரசியல் கட்சி தொடங்கி உள்ளேன். இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும் அதை செய்யும் பணியை தொடங்கியுள்ளேன், இளைஞர்கள் நல்ல அரசை உருவாக்க முடியும்” என்றார். எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் பதிவாளர் முனைவர் சு.பொன்னுசாமி நன்றி கூறினார். நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள் மாணவ மாணவிகள் உள்ளிட்ட ஏராளமனோர் பங்கேற்றனர்