தமிழ்நாடு

உலக சாதனைக்காக பந்துவீசும் மாணவர் : பேட்டிங் செய்த அமைச்சர் ஜெயக்குமார்

உலக சாதனைக்காக பந்துவீசும் மாணவர் : பேட்டிங் செய்த அமைச்சர் ஜெயக்குமார்

webteam

சென்னை மாநிலக் கல்லூரி மாணவர் ஒருவர் தனது ஒரு கையை கட்டிக்கொண்டு 15 மணி நேரம் இடைவிடாமல் பந்துவீசும் உலக சாதனைக்காக முயற்சித்து வருகிறார். 

சென்னை மாநிலக் கல்லூரியைச் சேர்ந்த மாணவன் செந்தில்வேல்குமார். இவர் மாநில கல்லூரியின் மைதானத்தில் இன்று காலை 5.30 மணியில் இருந்து உலக சாதனை படைக்கும் நோக்கில் ஒரு கையை கட்டிக்கொண்டு, 15 மணி நேரம் இடைவிடாமல் கிரிக்கெட் பந்துவீச முயற்சித்து வருகிறார். 

இவர் தொடர்ச்சியாக 15 மணி நேரம் பந்து வீசும் பட்சத்தில் இவருக்கு, ‘வில் மெடல் அஃப் வேர்ல்ட் ரெகார்ட்’ என்ற உலக சாதனைக்காக சான்றிதழ் வழங்கப்படும். கடந்த 2018ம் ஆண்டு ஏற்கனவே இந்த மாணவன் செந்தில்வேல் குமார் பாளையங்கோட்டையில் இடைவெளி விடாமல் 10 மணி நேரம் 450 ஓவர்கள் வீசி இதே உலக சாதனை படைத்தார். தற்போது அவரின் சாதனை அவரே முறியடிக்கும் நிகழ்வினை இவர் நிகழ்த்தி வருகிறார்.

சாதனையை நிகழ்த்தி வரும் மாணவனை தமிழக மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் நேரில் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்தார். அத்துடன் மாணவன் செந்தில் வீசிய பந்திற்கு அமைச்சர் ஜெயக்குமார் பேட்டிங் செய்தார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், முரளிதர ராவ் பாஜக கூட்டணி குறித்து கூறிய கருத்து, அவரின் தனிப்பட்ட கருத்து என்றார். கூட்டணி குறித்து அதிமுக தலைமை விரைவில் முடிவு எடுக்கும் எனவும், கட்சி எடுக்கும் எந்த முடிவுக்கும் தான் கட்டுப்படுவதாகவும் திட்டவட்டமாக தெரிவித்தார். 

அதேநேரத்தில் தேர்தலுக்கு தேவையான அனைத்து குழுக்களும் தயார் செய்யப்பட்டு வருகிறது என்றார். மேலும், திமுகதான் நிரந்தர எதிரி, அமமுக தான் நிரந்தர துரோகி ஆகவே இந்த இரண்டு கட்சிகளை தவிர வேறு எந்தக் கட்சிகளாக இருந்தாலும் கூட்டணி குறித்து பேசுவோம் எனக்கூறினார்.