தமிழ்நாடு

துறைமுகங்கள் கடல் அரிப்புக்கு வழிவகுக்குமா?

துறைமுகங்கள் கடல் அரிப்புக்கு வழிவகுக்குமா?

Rasus

கடல் அரிப்பு என்பது பருவநிலை மாற்றத்தின்போது கடல் நீரோட்டத்தால் நடக்கும் ஒரு நிகழ்வு. ஆனால் துறைமுக கட்டுமானங்கள் கடல் அரிப்பை அதிகரிப்பதாக ஆர்வலர்கள் கூறிவருகின்றனர். இயன்றவரை பாதிப்புகளை குறைத்தே துறைமுகங்கள் அமைக்கப்படும் என்கிறது அரசு.

‘சகர்பாலா’ என்று பெயரிடப்பட்டு 19,884 கோடி ரூபாய் செலவில் 96 எம்.டி.பி.ஏ திறன்வாய்ந்த துறைமுகங்கள் நாடெங்கும் அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தத் திட்டப்படி கீழ்மணக்குடி மற்றும் கோவளம் கிராமங்களுக்கு இடையே உள்ள பகுதியில் துறைமுக‌ம் அமைக்க சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் அனுமதி பெரும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. துறைமுகத்திற்காக கடலில் தூண்டில் வளைவுகள் அமைக்கப்பட்டு அதிகமான செயற்கை நிலம் உருவாக்கும் போது கடல் அரிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக கடல்சார் ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்.

ஒவ்வொரு கடல்சார் பகுதியும் ஒவ்வொரு தன்மை கொண்டது. கடல் அரிப்பு ஏற்படும் இடங்களில் ஆய்வு மேற்கொண்டு அதன் பின்னரே அதற்கு தகுந்த மாதிரியான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்கின்றனர் கடல்சார் ஆய்வாளர்கள்.

சமீபத்தில் கூட கடலூரில் கடல் அரிப்பினால் மீனவர்கள் படகுகளை கடலுக்குள் கொண்டு செல்ல முடியாமல் சிரமத்திற்கு ஆளாகினர். எதிர்காலத்தில் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படாமல் இருக்கும் வகையில் உரிய நடவடிக்கைகளை எடுத்து வருவதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருக்கிறார்.

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் அரசு உரிய அக்கறைகாட்ட வேண்டும் என்பதுடன், கடலையும் அதை ஒட்டிய பகுதிகளையும் பேணி காக்க ஒவ்வொரு குடிமகனுமே இயற்கையோடு இயைந்து வாழும் முயற்சிகளை மேற்கொள்வதும் அவசியம்.