தமிழ்நாடு

காளை சிலைக்கு மாலை, மக்களுக்கு இனிப்பு... - ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் உற்சாகம்!

காளை சிலைக்கு மாலை, மக்களுக்கு இனிப்பு... - ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் உற்சாகம்!

kaleelrahman

அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த தமிழக அரசு அனுமதி அளித்ததையடுத்து, புதுக்கோட்டையில் அமைந்துள்ள ஜல்லிக்கட்டு சிலைக்கு, ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும், மாடுபிடி வீரர்களும் மாலை அணிவித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

வரும் 2021ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்த தமிழக அரசு இன்று அனுமதி அளித்தது. இந்த ஆண்டு கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பாதிப்பால் கடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரையில் மூன்று மாதங்கள் மட்டுமே ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டதால், ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும் காளைகளை வளர்ப்பவர்களும் மாடுபிடி வீரர்களும் ஏமாற்றமடைந்தனர்.

இந்நிலையில், வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்த தமிழக அரசு இன்று அனுமதி அளித்ததையடுத்து தமிழகத்திலேயே அதிக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தும் மாவட்டமான புதுக்கோட்டை மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதனைக் கொண்டாடும் வகையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும், கால்நடை வளர்ப்போரும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும், தங்களது காளைகளுக்கு பழங்களை வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.


அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரி எதிரே அமைக்கப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு காளையின் நினைவுச் சிலை முன்பு திரண்ட காளைகள் வளர்ப்போரும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும் மாடுபிடி வீரர்களும் காளையின் சிலைக்கு மாலை அணிவித்ததோடு, அவ்வழியே வந்த பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் பேருந்துகளை நிறுத்தி, அதில் சென்ற பயணிகளுக்கும் இனிப்புகளை வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இந்த ஆண்டு மூன்று மாதங்கள் மட்டுமே ஐல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றதால் தாங்கள் ஏமாற்றம் அடைந்ததாகவும், வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த முன் கூட்டியே தமிழக அரசு அனுமதி அளித்திருப்பது தங்களுக்கு மகிழ்ச்சியை அளிப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

மேலும், அரசு அறிவித்துள்ள உரிய விதிமுறைகளை பின்பற்றி புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படும் என்றும், ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த அனுமதி அளித்த தமிழக அரசுக்கு தங்களது நன்றி தெரிவிப்பதாகவும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் தெரிவித்தனர்.