பொள்ளாச்சியில் பெண்களை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக கைதான அருளானந்தத்தின் ஜாமீன் மனுவை கோவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை ஆபாச வீடியோ எடுத்து, பாலியல் வன்கொடுமை செய்ததாக சில இளைஞர்கள் மீது 3 ஆண்டுகளுக்கு முன் புகார் கூறப்பட்டது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் காவல்துறையில் புகார் அளித்தார். இதுகுறித்து பொள்ளாச்சி போலீஸார் வழக்கு பதிவு செய்து, திருநாவுக்கரசு, ரிஸ்வான் , வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன் ஆகியோரை கைது செய்தனர்.
இந்த வழக்கு கடந்த 2019 ஏப்ரல் மாதம் சிபிஐ-க்கு மாற்றப்பட்டது. இதற்கிடையே, இந்த கும்பலால் பாதிக்கப்பட்ட 3 பெண்கள் சிபிஐ அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தியதில், பொள்ளாச்சி வடுகபாளையத்தைச் சேர்ந்த அருளானந்தம், பாபு, ஆச்சிப்பட்டி ஹேரேன்பால் ஆகியோருக்கும் இதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, மூவரையும் கடந்த ஜனவரி மாதம் சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். இந்நிலையில், ஜாமீன்கோரி அருளானந்தம் கோவை மகளிர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை நீதிபதி நிராகரித்தார்.