பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கில் பாதிக்கப்பட்ட மாணவியின் பெயரை வெளியிட்டது தொடர்பாக கோவை எஸ்பி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் அடையாளத்தை கோவை எஸ்.பி பாண்டியராஜன் செய்தியாளர்கள் சந்திப்பின் போது வெளியிட்டார். இதற்கு தமிழகம் முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்தன. இதனால் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளிக்க முன்வராமல் செய்யும் வண்ணம் கோவை எஸ்பி பாண்டியராஜனின் செயல்பாடுகள் உள்ளதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் ஏராளமான போராட்டங்கள் வலுத்து வருகின்றன.
இதையடுத்து ஏ.பி.சூர்யா பிரகாஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில் மாணவியின் அடையாளங்களை வெளியிட்ட எஸ்பி பாண்டியராஜன் மற்றும் சிபிசிஐடிக்கு வழக்கை மாற்றும் அரசாணையில் பெண்ணின் அடையாளம் வெளியிட்ட உள்துறை செயலாளர் நீரஞ்சன் மார்டி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கில் கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி இளந்தரியன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு சார்பாக ஆஜரான வழக்கறிஞர், “இந்த விவகாரம் தொடர்பாக எஸ்பி பாண்டியராஜன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக” தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து நீதிபதி இந்த வழக்கு தொடர்பாக கீழுமை நீதிமன்றங்களில் வழக்கு தொடர வேண்டும். அங்கு நிவாரணம் கிடைக்காவிட்டால் உயர்நீதிமன்றத்தை அனுகும்படி மனுதார்ருக்கு அறிவுரை வழங்கி வழக்கை முடித்து வைத்தார். இதனால் மனுதாரர் மீண்டும் பொள்ளாச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது.