தமிழ்நாடு

ஜிபிஎஸ் பொருத்தப்பட்ட பைக்கை திருடி மாட்டிக்கொண்ட திருடர்கள்..!

ஜிபிஎஸ் பொருத்தப்பட்ட பைக்கை திருடி மாட்டிக்கொண்ட திருடர்கள்..!

Rasus

சென்னையில் திருடுபோன விலையுயர்ந்த இருசக்கர வாகனத்தை, ஜிபிஎஸ் மூலமாக சுமார் நூறு கிலோமீட்டர் பின்தொடர்ந்து காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

சென்னை கீழ்பாக்கம் மேடவாக்கம் சாலை இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர் புஷ்பராஜ். ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்புடைய பல்சர் வாகனத்தை வாங்கிய அவர், அதனை வீட்டின் முன் பார்க்கிங் செய்ய இடமில்லாமல் அவ்வப்போது தாம் வசிக்கும் தெருவோரம் நிறுத்துவது வழக்கம். அத்துடன் பாதுகாப்பு கருதி, பைக்கில் யாருக்கும் தெரியாத வகையில் ஜிபிஎஸ் கருவியை இணைத்த அவர், அதனை மொபைல் போனின் செயலி மூலம் இணைத்து வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல பல்சர் பைக்கை தெருவோரத்தில் நிறுத்திய அவர், இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது பைக் திருடப்படுவதாக புஷ்பராஜ்-க்கு அலாரம் அடித்துள்ளது. இதனையடுத்து வெளியே வந்த பார்த்த புஷ்பராஜ், பைக் திருடப்பட்டுள்ளதை உறுதி செய்தார்.

இதனையடுத்து உடனடியாக தலைமைச்செயலக காலனி காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்த புஷ்பராஜ், தமது இருசக்கர வாகனத்தில் ஜி.பி.எஸ். கருவியை பொருத்திய தகவலையும் கொடுத்துள்ளார். இதையடுத்து போலீஸ் வாகனத்தில் சென்றால் திருடர்கள் தப்பிவிடுவார்கள் என்று எண்ணிய போலீசார், புஷ்பராஜை ஆட்டோ ஒன்றில் ஏற்றிக்கொண்டு தங்களது பயணத்தை தொடங்கினர். இருசக்கர வாகனத்தில் உள்ள ஜி.பி.எஸ். கருவி அனுப்பும் சமிக்ஞைகளை கொண்டு, அவ்வாகனம் எத்திசையில் பயணிக்கிறது என்பதை உற்றுநோக்கியவாறு தொடங்கிய இத்தேடுதல் பயணம், சென்னையை தாண்டி, காஞ்சிபுரம் மாவட்டம் கூவத்தூர் வரை சுமார் நூறு கிலோமீட்டர் தூரம் நீடித்தது. பின்னர் அங்குள்ள பவூஞ்சூர் என்ற கிராம சாலையோரம், புஷ்பராஜின் இருசக்கர வாகனம் கேட்பாரற்று நிறுத்தப்பட்டிருந்ததை கண்ட காவலர்கள், திருடரை பிடிக்க சற்றுநேரம் மறைந்திருந்து நோட்டமிட்டனர். அப்போது இருசக்கர வாகனத்தை எடுக்க வந்த இருவரை அதிரடியாக சுற்றிவளைத்த காவலர்கள் அவர்களை கைது செய்தனர்.

விசாரணையில் இருசக்கர வாகனத்தை திருடியது சென்னை திரு.வி.க. நகரைச் சேர்ந்த மேக சூர்யா என்ற பேய் குழந்தை என்பது தெரியவந்துள்ளது. வாகனத்தை திருடிய அவர், மத்திய கைலாஷ் பகுதியில் இருந்த தமது நண்பர் வினோத்குமாரை அவ்வாகனத்தில் அழைத்துக்கொண்டு சென்றதும், வரும் வழியில் செல்போன் பறிப்பு, வழிப்பறி கொள்ளையிலும் ஈடுபட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.

பைக்கின் சைட்லாக்கை உடைத்து, சாவி இல்லாமலேயே மேக சூர்யா திருடியுள்ளார். அத்துடன் ஏற்கெனவே அடையாறு உள்ளிட்ட பகுதியில் மேக சூர்யா வழிப்பறி உள்ளிட்ட கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு சிறை சென்றதும் தெரியவந்துள்ளது. பைக்கில் பெட்ரோல் தீர்ந்து போனதால், பவூஞ்சூர் என்ற கிராமத்தில் பைக் நின்றுள்ளது. இதனையடுத்து வழியில் வழிப்பறி செய்த பணத்தில் பெட்ரோல் வாங்கி பைக்கை எடுக்க முயன்றபோது போலீசாரிடம் அவர்கள் சிக்கியுள்ளனர்.

அத்துடன் போலீசார் பிடித்தபோது, சாப்பாட்டிற்காகத் தான் திருடுவதாகவும், அடிக்கடி காவல்துறையினர் பிடிப்பதால் தன்னுடைய திருட்டு தொழில் பாதிக்கப்படுவதாக போலீசாரிடம் கூறிய மேக சூர்யா, தான் என்ன பாவம் செய்தேன் எனவும் புலம்பியுள்ளார். ஏற்கெனவே ஒரு வழக்கில் மேக சூர்யாவை பிடிக்க முயன்றபோது, தன்னை கைது செய்யக்கூடாது என்று மேக சூர்யா தற்கொலை மிரட்டல் விடுத்ததாகவும் போலீசார் கூறுகின்றனர். அத்துடன் திருடர்களிடம் இருந்து 4 செல்போன்கள், பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பைக் திருட்டை தடுக்க புஷ்பராஜ் பயன்படுத்திய சாஃப்ட்வேர் 4000 ரூபாய்க்கே கிடைப்பதாக கூறப்படுகிறது. எனவே பொதுமக்கள் தங்கள் பொருட்களை பாதுகாக்க இதுபோன்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தலாம் என்றும் போலீசார் கூறுகின்றனர்.