சென்னை ஓட்டேரியில் பேருந்து நடத்துனர் மீது தாக்குதல் நடத்திய 2 பள்ளி மாணவர்களை போலீசார் கைது செய்தனர். பேருந்துகளை நிறுத்தி மறியலில் ஈடுபட்ட நடத்துனர்கள், ஓட்டுனர்கள் 50 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா சதுக்கம் முதல் பெரம்பூர் வரை செல்லக்கூடிய 29a எண் கொண்ட பேருந்து, ஓட்டேரி நோக்கி நேற்று மாலை சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த பேருந்தில் புரசைவாக்கத்தில் இயங்கி வரக்கூடிய பள்ளி மாணவர்கள் சிலர் ஏறியுள்ளனர். அவர்கள் பேருந்தின் படிக்கட்டில் நின்றபடி தாளம் தட்டி பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.
பயணம் செய்த பள்ளி மாணவர்களை உள்ளே வரும்படி அப்பேருந்தின் நடத்துனரான கார்த்திக் கூறியுள்ளார். ஆனால் மாணவர்கள் தொடர்ந்து உள்ளே வராததால் கீழே இறங்கும்படி நடத்துனர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், கோபமடைந்த பள்ளி மாணவர்கள் நடத்துனரை தாக்கியுள்ளனர். பின்னர் உடனே பேருந்தை நிறுத்திவிட்டு கீழே இறங்கிய ஓட்டுனர் சுப்பிரமணியையும் மாணவர்கள் கல்லால் தாக்கி விட்டு தப்பியோடியதாக தெரிகிறது.
காயமடைந்த பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர், தாக்கிய பள்ளி மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனைக்கண்ட மற்ற பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பேருந்தை சாலையிலேயே நிறுத்திவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 20-க்கும் மேற்பட்ட பேருந்துகள் சாலையில் நின்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காவல்துறை பேச்சுவார்த்தைக்கு பிறகு கலைந்து சென்றனர்.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக நடத்துனர் கார்த்திக் ஓட்டேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் 294(பி)- ஆபாசமாக திட்டுதல், 353- வன்முறை செயலால் அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் ஆகிய 2 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நடத்துனரை தாக்கிய 2 பள்ளி மாணவர்களை ஓட்டேரி போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பி ஓடிய மற்ற மாணவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
இதைப்போல, பேருந்தை சாலையில் நிறுத்தி போராட்டம் நடத்தியதாக பேருந்து நடத்துனர் கார்த்திக், ஓட்டுனர் சுப்பிரமணி மற்றும் 50 நடத்துனர்கள், ஓட்டுனர்கள் மீது ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்திய தண்டனை சட்டப்பிரிவுகளான 143- சட்டவிரோதமாக கூடுதல், 188- அரசு அதிகாரியின் உத்தரவை மதிக்காமல் செயல்படுதல், 269- உயிருக்கு ஆபத்தான தொற்றுநோய் பரப்பக்கூடிய செயலில் ஈடுபடுதல் ஆகியவற்றை ஓட்டேரி போலீசார் பதிவு செய்துள்ளனர்.