தமிழ்நாடு

சென்னையில் 7 கல்லூரி மாணவர்கள் மீது வழக்குப்பதிவு !

சென்னையில் 7 கல்லூரி மாணவர்கள் மீது வழக்குப்பதிவு !

webteam

சென்னையில் மாநகர பேருந்தில் ஏறி பெரும் அட்டகாசம் செய்த 7 கல்லூரி மாணவர்கள் உட்பட 10 இளைஞர்கள் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

சில நாட்களாக சென்னையில் கல்லூரி மாணவர்களின் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அந்த வரிசையில், கடந்த வெள்ளிக்கிழமை அன்று 10 இளைஞர்கள் ஆவடி - விவேகானந்தர் இல்லம் இடையே செல்லக்கூடிய மாநகர பேருந்தில் அண்ணா நகர் வந்தபோது திடீரென்று ஏறினர். அவர்களில் சிலர் பேருந்தின் படிக்கட்டுகளில் தொங்கியபடியும், சிலர் பேருந்தின் மேற்கூரை மீது ஏறியும் அட்டகாசம் செய்தனர். பேருந்தில் இருந்த பயணிகளிடமும் அட்டகாசம் செய்த அவர்கள், பின் பேருந்தில் இருந்து இறங்கி சாலையில் சென்றுக்கொண்டிருந்த பாதசாரிகளிடமும் அட்டகாசம் செய்துள்ளனர். 

மேலும், இந்தச் சம்பவம் குறித்து ஊடகங்களில் வெளியான வீடியோ காட்சிகளை போலீஸார் சேகரித்து அட்டகாசம் செய்த இளைஞர்களை பிடித்து 10 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பிடிபட்ட 10 இளைஞர்களில் 7 பேர் பச்சையப்பன் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் என்பதும், அதில் 3 பேர் முன்னாள் மாணவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. 

இதுகுறித்து விசாரணை அதிகாரி ஒருவர் கூறுகையில், பிடிப்பட்டவர்களில் சிலர் பச்சையப்பன் கல்லூரியின் இளநிலை படிக்கும் மாணவர்கள். அவர்களிடம் விரைவில் விசாரணை நடத்தப்படும் என்றும் கூறினார். சில நாட்களுக்கு முன் இதே போல் பேருந்தில் ஏறி அட்டகாசம் செய்த 75 மாணவர்களை போலீஸார் எச்சரித்து அவர்களுக்கு அறிவுரைகள் வழங்கியது குறிப்பிடத்தக்கது.