குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட போலீஸ்காரரை பொதுமக்கள் கட்டி வைத்து அடித்தனர். போதை தெளிந்ததும் அவர் மன்னிப்புக் கடிதம் கொடுத்ததை அடுத்து, விடுவிக்கப்பட்டார்.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள அமரகுந்தி பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன். சென்னையில் காவலராக இருக்கிறார். இவர் மனைவிக்கு குழந்தை பிறந்ததை தொடர்ந்து, ஊருக்கு வந்தார். ஜாலியாக இருக்கலாம் என்று தனது நண்பர்களுடன் பெரியேறிபட்டி கிராமத்தில் உள்ள தாண்டனூர் மாரியம்மன் கோவில் அருகில் அமர்ந்து மது அருந்தினர். போதை அதிகமானதை தொடர்ந்து அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அது தகராறாக மாறியது. அப்போது அந்த வழியாக வந்த ராஜா என்பவர், ’கோவிலில் மது அருந்தியதோடு இங்கே ஏன் தகறாறு செய்கிறீர்கள்’ என்று கேட்டுள்ளார். அப்போது அவரை, மகேந்திரன் தாக்கியுள்ளார். இதையறிந்த கிராம மக்கள் மகேந்திரனிடம் விசாரித்துள்ளனர்.
அப்போது அவர்களையும் தகாத வார்த்தைகளால் திட்டியதைத் தொடர்ந்து ஒன்று கூடிய பொதுமக்கள், காவலர் மகேந்திரனை கட்டிவைத்து அடித்துள்ளனர். மேலும், நடந்த சம்பவம் குறித்து தொளசம்பட்டி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
பொதுமக்களிடம் சமரசம் பேசிய போலீசார், தகராறில் ஈடுபட்ட மகேந்திரனை கிராமத்தினரிடம் மன்னிப்பு கேட்க வைத்தனர். மன்னிப்பு கடிதமும் எழுதி வாங்கினர். இதையடுத்து வழக்குப் பதிய வேண்டாம் என்று கிராமத்தினர் கேட்டுக்கொண்டதால் விடுவித்தனர்.