தமிழ்நாடு

பொன்னமராவதியில் சட்ட ஒழுங்கு பிரச்சனை ? போலீசார் குவிப்பு

பொன்னமராவதியில் சட்ட ஒழுங்கு பிரச்சனை ? போலீசார் குவிப்பு

webteam

பொன்னமராவதியில் குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்த மக்கள் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் போராட்டம் நடத்தி வரும் சூழலில் சட்ட ஒழுங்கு பிரச்சனை வராமல் தடுக்க ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி காவல் நிலையத்தில் நேற்று ஒரு சமுதாயத்தை சேர்ந்த மக்கள் மனு அளித்தனர். அந்த மனுவில் மற்றொரு சமுதாயத்தை சேர்ந்த மர்ம நபர்கள் இருவர் எங்கள் சமுதாய மக்களை இழிவு படுத்தி வாட்ஸ் ஆப்பில் பேசியுள்ளனர். அந்த வாட்ஸ் ஆப் உரையாடலில் பேசிய அந்த இரண்டு நபர்களையும் உடனே கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியிருந்தனர். மேலும் பொன்னமராவதி காவல் நிலையத்தை சுமார் 500 க்கும் மேற்பட்ட மக்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டமும் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து பொன்னமராவதியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ் தலைமையில் புகார் அளித்தவர்களிடம் பேசுவார்த்தை நடத்தினர். அந்த பேச்சுவார்த்தையில் சம்பந்தப்பட்ட நபரை கண்டுபிடித்து அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

இந்நிலையில் இன்று காலையில் இருந்து சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட புகார் அளித்த சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள், குற்றவாளியை கண்டுபிடித்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி, சாலைகளில் மரங்கள், மின் கம்பங்கள் மற்றும் பனை மரங்களை ஆங்காங்கே ரோட்டின் நடுவே வெட்டிப்போட்டு, பனையபட்டியில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் வரை போரட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் பொன்னமராவதி பேருந்து நிலையம் முன்பு குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பெண்கள் உட்பட சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர்  போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு, பொன்னமராவதி முழுவதும் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் அடைக்கப்பட்டிருந்த கடைகளின் மீதும், காவல்நிலையம் மீதும் கல்வீச்சி போன்ற தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனால் அந்தப் பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.

இதனைதொடர்ந்து திருச்சி சரக டிஐஜி லலிதா லட்சுமி தலைமையில், காவல் அதிகாரிகள் போராட்டம் நடைபெறும் இடத்தில் விசாரணை மேற்கொண்டு  வருகின்றனர். மேலும் கல்வீச்சி தாக்குதலில் பலத்த காயம் அடைந்துள்ள காவலர்கள் சிலர்  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் அங்கு பாதுகாப்புக்காக ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.