தமிழ்நாடு

சென்னையில் மர்லின் மன்றோ சிலையா ? - கலாய்க்கும் நெட்டிசன்ஸ்

சென்னையில் மர்லின் மன்றோ சிலையா ? - கலாய்க்கும் நெட்டிசன்ஸ்

webteam

விடுதலை புலிகள் இயக்கத்தை சேர்ந்த சுப. தமிழ்செல்வன் இறப்புக்கு அஞ்சலி செலுத்துவதற்காக கடந்த 2007-ம் ஆம் ஆண்டு ஒரு பேரணி நடைபெற்றது. இதில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பழ நெடுமாறன் ஆகியோர் பங்கேற்றனர். ஆனால் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டதை காரணம் காட்டி, அவர்கள் கைது செய்யப்பட்டனர். வைகோ 350க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த விவகாரத்தில் 2009-ம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 

குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டும் வைகோ ஆஜராக இதுவரை சம்மன் அனுப்பப்படவில்லை. எனவே வழக்கை ரத்து செய்யுமாறு சென்னை உயர்நீதிமன்றத்தில் அவரது தரப்பில் நேற்று மனுதாக்கல் செய்யப்பட்டது. எதற்க்காக இவ்வளவு தாமதம் என அறிந்து கொள்வதற்காக காவல்துறை தாக்கல் செய்த குற்றப் பத்திரிகை நகலை செய்தியாளர்கள் பலரும் பெற்றுக் கொண்டனர். அப்போது குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றிருந்த விஷயமே தற்போது “மெட்ராஸ் டே” ஆன இன்று எதேச்சையாக பொருந்த, நெட்டிசன்கள் கலாய்க்க ஆரம்பித்திருக்கின்றனர். 

சென்னை அண்ணா சாலையில் இருப்பது தாமஸ் மன்றோ சிலை. அதன் அருகே பேரணி நடத்த முயன்ற வைகோ, பழ நெடுமாறன் மற்றும் இதர பேரணியில் பங்கேற்றோர் கைது செய்யப்பட்டனர். ஆனால் காவல்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் “ 12.11.07 ஆம் தேதி மதியம் 2.00 மணி முதல் அண்ணா சாலையில் மர்லின் மன்றே சிலை அருகில் பாதுகாப்பு பணியில் உதவி ஆணையர் உத்தரவின் பேரில் பணியில் இருந்தேன்” என காவல்துறை ஆய்வாளர் குறிப்பிடுவது போல் உள்ளது. அதாவது தாமஸ் மன்றோ சிலை என குறிப்பிடுவதற்கு பதில் மர்லின் மன்றோ என குறிப்பிட்டு விட்டார்கள்.