தமிழ்நாடு

புதிய ட்ரெண்டை கண்டுபிடித்த குற்றவாளிகள்: சினிமா பாணியில் அதிரடி காட்டிய போலீஸ்..!

புதிய ட்ரெண்டை கண்டுபிடித்த குற்றவாளிகள்: சினிமா பாணியில் அதிரடி காட்டிய போலீஸ்..!

webteam

சென்னை செங்குன்றத்தில் காவல்துறை சீருடையில் தொழிலதிபரை கடத்திச் சென்ற எட்டு பேர் 12 மணி நேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

செங்குன்றத்தைச் சேர்ந்தவர் தொழிலதிபர் கணேசன். கடந்த 2-ஆம் தேதி இரவு அவரது வீட்டுக்கு 4 பேர் வந்துள்ளனர். அவர்களில் ஒருவர் காவல்துறை உதவி ஆய்வாளர் சீருடையில் இருந்துள்ளார். விசாரணை நடத்த வேண்டும் என்று கூறி கணேசனை தங்களுடன் அவர்கள் அழைத்துச் சென்றுவிட்டனர்‌.

இரவு முழுவதும் கணேசனை காணாததால் அவரது உ‌றவினர்கள் செங்குன்றம் காவல் நிலையம் சென்று விசாரித்துள்ளனர். அப்போது தான் கணேசனை அழைத்துச் சென்றது காவல்துறையினர் இல்லை ‌என்பது தெரியவந்தது. ஏதோ தவறு நடந்திருக்கிறது என்று உணர்ந்த நிலையில் கணேசனின் செல்போனில் இருந்து அவரது உறவினர் ராமச்சந்திரனுக்கு அழைப்பு ஒன்று வந்துள்ளது. தன்னை சிலர் கடத்தி வந்துள்ளதாகவும் விடுவிப்பதற்கு 25 லட்சம் ரூபாய் கேட்பதாகவும் ராமச்சந்திரனிடம் தெரிவித்துள்ளார் கணேசன்.

கடத்தல்காரர்கள் கேட்கும் பணத்தை தயார் செய்யும் படியும் கூறியுள்ளார். அதன்பிறகு அவரது செல்போன் அணைத்து வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே கடத்தல்காரர்கள் கேட்கும் பணத்தை தருவதாக கூறும்படி ராமச்சந்திரனிடம் காவல்துறையினர் கூறினர். அதன்படி அவரும் கூற வண்டலூர் அருகே பணத்தை கைமாற்ற முடிவு செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து பணம் வாங்க வந்தவர்களை பதுங்கி இருந்து காவல்துறையினர் மடக்கி பிடித்துள்ளனர்.

கடத்தலில் ஈடுபட்ட வடகரை சக்தி, சிவா, சுமன், மதன், கணேஷ், அசோக், ராஜேஷ், சதீஷ் ஆகியோரை12 மணி நேரத்தில் மடக்கிப் பிடித்த காவல்துறையினர் கடத்தப்பட்ட கணேசனையும் பத்திரமாக மீட்டனர். பிடிபட்டவர்களில் ஒருவரான சுமன்தான் உதவி ஆய்வாளர் சீருடையில் கணேசனை கடத்தியவர் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். தப்பியோடிய கந்தன் என்பவரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர். காவல்துறை சீருடையில் ஆட்களை கடத்தும் புதிய ட்ரெண்டை குற்றவாளிகள் தொடங்கியுள்ளதாக கூறும் காவல்துறையினர், பொதுமக்கள் ‌எச்சரிக்கையாக இருக்கும்படியும் அறிவுறுத்தி உள்ளனர்.