தமிழ்நாடு

காருக்குள் இருந்த ரூ.90 லட்சம்: தொழிலதிபரின் கார் கடத்தப்பட்ட சம்பவத்தில் அதிர்ச்சி தகவல்!

காருக்குள் இருந்த ரூ.90 லட்சம்: தொழிலதிபரின் கார் கடத்தப்பட்ட சம்பவத்தில் அதிர்ச்சி தகவல்!

kaleelrahman

கேரள தொழிலதிபரின் கார் கடத்தப்பட்ட சம்பவத்தில் ரூ. 27லட்சம் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது. காரை கைப்பற்றி போலீசார் மேற்கொண்ட சோதனையில் காரின் ரகசிய அறையில் இருந்து கட்டுக் கட்டாக பணம் இருந்தது. இது ஹவாலா பணமா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கேரளா மாநிலம் மலப்புரத்தை சேர்ந்தவர் அப்துல் சலாம் (50). இவர், கேரளாவில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் இவர் நேற்று முன் தினம், தனது கார் ஓட்டுநர் சம்சுதீன் (42) என்பவருடன் பெங்களூரில் இருந்து கோவை வழியாக கேரளாவிற்கு கிளம்பினர்.


இதையடுத்து கோவை நவக்கரை அருகே வந்த போது இரண்டு கார்களில் வந்த மர்ம கும்பல், அப்துல் சலாமை கத்தி முனையில் மிரட்டி கார் மற்றும் ரூ.27 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்றனர். இச்சம்பவம் தொடர்பாக க.க.சாவடி போலீசார் வழக்குப் பதிவு செய்து, எஸ்.பி.அருளரசு உத்தரவின் பேரில் 3 தனிப்படை அமைத்து விசாரணையை தீவிரப்படுத்தினர்.

இந்நிலையில் கோவை சிறுவாணி சாலை மாதம்பட்டி அருகே கேரள பதிவு எண் கொண்ட கார் நிற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அங்கு சென்று பார்த்த போது கேரள ரியல் எஸ்டேட் அதிபரிடமிருந்து கடத்தப்பட்ட கார் என தெரியவந்தது. இதையடுத்து கைரேகை நிபுணர்கள் உதவியுடன் காரில் இருந்த தடயங்களை போலீசார் சேகரித்தனர்.

இதையடுத்து மீட்கப்பட்ட கார் கே.ஜி.சாவடி காவல் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டது. அதைத் தொடர்ந்து பேரூர் பச்சாபாளையம் அருகே அப்துல் சலாம் மற்றும் சம்சுதீனின் செல்போன்களும் கண்டெடுக்கப்பட்டது. இந்நிலையில் மீட்கப்பட்ட காரை தனிப்படை போலீசார் சோதனை செய்தனர்.

அப்போது காரின் பின்பகுதியின் அடியில் 4 ரகசிய அறைகள் அமைக்கப்பட்டு இருந்தன. அதை திறந்து பார்த்தபோது கட்டுக்கட்டாக பணம் இருந்தது. அந்த பணத்தை பறிமுதல் செய்த போலீசார் எண்ணிப் பார்த்தபோது அதில் 90 லட்சம் பணம் இருந்தது. இதையடுத்து அப்துல் சலாம் மற்றும் சம்சுதீனிடம் போலீசார் விசாரணையை தீவிரப் படுத்தியுள்ளனர்.


காரில் ஹவாலா பணம் கடத்தி வருவதை அறிந்த கும்பல் அப்துல் சலாமின் காரை வழிமறித்து 27 லட்சம் ரூபாயை கொள்ளையடித்திருக்கலாம் என்றும், ஆனால் காருக்குள் இருந்த ரகசிய அறையில் பணம் இருந்ததை அறியாத கொள்ளையர்கள் காரை அனாதையாக விட்டுச் சென்றிருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக  போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.