MP Kanimozhi pt desk
தமிழ்நாடு

”பிரதமர் மோடி, அரசியல் லாபத்திற்காக வெறுப்பு அரசியலை கையில் எடுத்துள்ளார்” - திமுக எம்பி கனிமொழி

இஸ்லாமியர்கள் குறித்து வெறுப்பை உருவாக்கும் வகையில் பிரதமர் பேசியுள்ளார். நாட்டில் இருப்பவர்களுக்கு அது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது என்று பிரதமர் மோடியை திமுக எம்பி கனிமொழி விமர்சித்துள்ளார்.

webteam

செய்தியாளர்: சுரேஷ்குமார்

சென்னை லலித் கலா அகாடமியில் நடைபெற்ற வேர்க்கோடுகள் ஓவிய விருது வழங்கும் விழாவில், நாடாளுமன்ற உறுப்பினரும் திமுக துணை பொதுச் செயலாளருமான கனிமொழி மற்றும் திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் ரஞ்சித் பேசும்போது... ”கனிமொழி தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன். ஓவியர் சந்துரு தான் எனது சினிமா வழிகாட்டியாக இருந்தவர். மிகவும் நுண்ணிப்புடன் காணக்கூடிய கலைகளை நான் என்னுடைய திரைப்படத்தில் காட்சிப்படுத்துகிறேன்” என்றார்.

PM Modi

இதைத் தொடர்ந்து திமுக எம்பி கனிமொழி பேசிய போது.... ”கலைகளும் அரசியலும் எப்போதும் ஒருமித்த பயணத்தை மேற்கொள்வதில்லை. ஓவியக்கலை தமிழ்நாட்டில் கண்டுகொள்ளப்படாத ஒன்றாக உள்ளது. தற்போது மிகப்பெரிய பதவிகளில் இருப்பவர்கள் வெறுப்பு பேச்சுகளை பேசிவரும் நிலையில், கலைகள் அன்பை கொடுக்கக் கூடிய ஒன்றாக உள்ளது. சக மனிதனிடத்தில் காட்டும் அன்பு மட்டும் தான் இந்த நாட்டை, சமூகத்தை நாம் காப்பாற்ற முடியும் கனிமொழி” என்று பேசினார்.

தொடர்ந்து கனிமொழி செய்தியாளர்களுக்கு பேட்டியில்.... ”இஸ்லாமியர்களும் இந்த நாட்டின் குடிமக்கள் எல்லோருக்கும் இருக்கும் உரிமைகள் அவர்களுக்கும் உண்டு. அவர்களுக்கு எந்த திட்டமும் இருக்கக் கூடாது என்று வெறுப்பை உருவாக்கும் வகையில் ஒரு பிரதமர் பேசுவது இந்திய நாட்டில் இருப்பவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. அரசியல் லாபத்திற்காக இப்படிப்பட்ட வெறுப்பு, காழ்ப்புணர்வு அவசியமா என்ற கேள்வியை நான் முன்வைக்கிறேன். ஒருவேளை தனக்கு அரசியல் லாபம் கிடைக்கும் என்ற எண்ணத்தில் பிரதமர் இந்த கருத்தை கூறி இருக்கலாம்.

PM Modi

தேர்தலை கர்நாடக, தமிழ்நாடு என்ற பிரச்னையாக பார்க்க முடியாது.. முதலில் நாடு காப்பாற்றப்பட வேண்டும். இப்படிப்பட்ட வெறுப்பு விதைக்கப்படும் போது நாடு முழுவதும் மணிப்பூராக மாறிவிடுமோ என்ற அச்சம் அனைவரிடமும் உள்ளது.

ஆணவக் கொலைகள் சமூகத்தில் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. நிச்சயமாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும்...செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்... வெறுப்பிலிருந்து மனிதநேயத்தை நோக்கி மக்கள் நகரும் காலத்தில் நிற்கிறோம். அதை நோக்கி தான் தேர்தல் முடிவுகளும் இருக்கும் என நம்புகிறேன்” என்றார் கனிமொழி.