எம்.பி. டி.ஆர்.பாலு, பிரதமர் மோடி pt web
தமிழ்நாடு

“தமிழ்நாட்டை வஞ்சித்துவிட்டுப் பொய்களால் மறைக்க முயற்சிக்கலாமா?” பிரதமருக்கு MP டி. ஆர்.பாலு கேள்வி

தமிழ்நாட்டை வஞ்சித்துவிட்டுப் பொய்களால் மறைக்க முயற்சிக்கலாமா? என பிரதமருக்கு டி. ஆர்.பாலு அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்துள்ளார்.

PT WEB

நெல்லை பாளையங்கோட்டை பெல் மைதானத்தில் பாஜக சார்பில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று சிறப்புரையாற்றினார். அப்போது திமுகவை சாடிய அவர், “திமுகவினர் வெறுப்பு அரசியலை பரப்புகின்றனர். ஒரே குடும்பத்தின் வளர்ச்சியைத்தவிர மாநில வளர்ச்சியை திமுகவினர் பார்க்கவில்லை” என தெரிவித்தார். 2024 தேர்தலுக்குப்பின் திமுக இருக்காது என்றும் பிரதமர் மோடி கூறினார்.

இந்நிலையில் “தமிழ்நாட்டை வஞ்சித்துவிட்டுப் பொய்களால் மறைக்க முயற்சிக்கலாமா?” என பிரதமருக்கு டி. ஆர்.பாலு அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசு முறைப் பயணமாக தமிழ்நாட்டுக்கு வந்துள்ள பிரதமர், அரசியல் பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு அவதூறுகளை அள்ளி இறைத்துவிட்டு சென்றிருகிறார். பத்தாண்டுகளில் செய்த சாதனைகள் எதுவும் இல்லாததால், ஊழல் வழக்கில் முதலமைச்சர் பதவி பறிக்கப்பட்ட ஜெயலலிதாவை புகழ்ந்தும், திமுக அரசை விமர்சித்தும் பிரதமர் பேசியிருக்கிறார். ஜெயலலிதாவை வைத்து வாக்கு வாங்க நினைக்கிறார்.

எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து I.N.D.I.A கூட்டணிக்கு அடிதளம் அமைத்ததால் முதலமைச்சர் மீது பாஜகவுக்கு கோபம். பின்னலாடை வர்த்தக சந்தைக்கான வாசலை வங்கதேசத்திற்கு திறந்து விட்டு திருப்பூரை வஞ்சித்து, மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு எந்த பணியையும் மேற்கொள்ளாமல், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட வெள்ள பாதிப்புக்கு பேரிடர் நிவாரணமாக ஒரு பைசா கூட வழங்காமல், மத்திய அரசுக்கு ஒத்துழைப்பு தராத ஆட்சி தமிழ்நாட்டில் நடக்கிறது என பொய்யை சொல்லியிருக்கிறார் பிரதமர்.

டி.ஆர்.பாலு

திமுகவை இல்லாமல் ஆக்கிவிடுவார் என சவால் விடுத்துள்ளார் பிரதமர். ஏற்கனவே இப்படி சொல்லி வரலாற்றில் காணாமல் போனவர்கள் பட்டியலில் இவரும் இணைவார்” என தெரிவித்துள்ளார்.